ஆன்லைன் சிறார் பாதுகாப்பு ஒத்துழைப்பு: மலேசியா–இந்தோனேசியா இணக்கம் – அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாமி

பாலி,

ஆன்லைன் சிறார் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கவனிப்பதற்கு ஏஜென்சிகள் இடையேயான ஒத்துழைப்பை அமல்படுத்த மலேசியாவும் இந்தோனேசியாவும் இணக்கம் கண்டிருக்கின்றன என்று தொடர்புத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்ஸில் தெரிவித்திருக்கிறார்.

இந்த ஒத்துழைப்பில் சிங்கப்பூரையும் சேர்த்துக்கொள்ளும் உத்தேச முயற்சியும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஆன்லைன் பாதுகாப்பு, குறிப்பாக சிறார்கள் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு மிக முக்கியமான பிரச்சினையாகும். இப்பிரதேசத்தில் உள்ள நாடுகளின் கூட்டுக் கவனம் இதற்குத் தேவைப்படுகிறது.

மலேசியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சம்பந்தப்பட்ட முத்தரப்புக் கூட்டத்தை நடத்துவதற்கும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அனைத்தும் சாத்தியமானால் டிசம்பரில் இந்த முத்தரப்புக் கூட்டம் நடத்தப்படலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  நேற்று பாலியில் இந்தோனேசிய தொடர்புத்துறை அமைச்சர் மியூத்தியா ஹபிட்டைச் சந்தித்து இருவழிப் பேச்சுகளை நடத்திய பிறகு அவர் பெர்னாமாவிடம் இத்தகவலை வெளியிட்டார்.

ஆசியான் நாடுகள் வெவ்வேறு சட்டங்களையும் சட்ட அமலாக்க அணுகுமுறைகளையும் கொண்டிருப்பினும் மலேசியாவும் இந்தோனேசியாவும் சிங்கப்பூரும் மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் இப்பிரதேசத்தில் உள்ள மற்ற நாடுகளும் இதில் பங்கேற்க ஊக்குவிப்பாக அமையும் என்று டத்தோஸ்ரீ ஃபாமி தெரிவித்தார்.

மலேசியாவின் தொடர்பு பல்லூடக ஆணையத்திற்கும் (எம்சிஎம்சி), இந்தோனேசியாவின் தொடர்பு டிஜிட்டல் துறை அமைச்சுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம் தெரிவித்திருக்கும் அமைச்சர் மியூத்தியாவின் நோக்கத்தை வரவேற்பதாக டத்தோஸ்ரீ ஃபாமி குறிப்பிட்டார்.

சமூக ஊடகம் தொடர்பான பொதுப் புகார்களைக் கவனிப்பதில் எம்சிஎம்சிக்குப் பரந்த அனுபவம் உள்ளது. ஆகவே இந்த விஷயத்தில் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு அது பயனுள்ளதாக அமையும் என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here