பினாங்கு மருத்துவமனை அருகே சிமெண்ட் லோரி கவிழ்ந்து விபத்து: உள்ளே சிக்கிய ஓட்டுநர்!

ஜார்ஜ் டவுன், பிப் 6:

பினாங்கு மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஜாலான் ரெசிடென்சியில் (Jalan Residensi) உள்ள கட்டுமானத் தளத்தில் இன்று காலை சிமெண்ட் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் ஓட்டுநர் வாகனத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு காலை 11.29 மணிக்கு அவசர அழைப்பு வந்தது. ஜாலான் பேராக் மற்றும் லெபு பந்தாய் நிலையங்களைச் சேர்ந்த 13 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், கட்டுமானப் பணியின் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி திடீரென கவிழ்ந்தது தெரியவந்தது. இதில் ஓட்டுநர் அமரும் பகுதியில் அவர் பலமாக சிக்கியுள்ளார்.

பினாங்கு தீயணைப்புத் துறையின் உதவி செயல்பாட்டு இயக்குனர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறுகையில், “மீட்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஓட்டுநரை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்,” என்றார். காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளும் மீட்புக் குழுவினருக்கு உதவி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here