மலாக்கா லிட்டில் இந்தியாவில் தீபாவளி களைகட்டுகிறது- டத்தோஶ்ரீ ரமணன் நேரில் பார்வை

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மலாக்கா லிட்டில் இந்தியாவில் நடைபெற்று வரும் தயாரிப்புகள் களைகட்டியுள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் அங்கு நேரில் சென்று நிலவரத்தைப் பார்வையிட்டதுடன், வணிகர்கள், இந்திய சமூகத்தினர், சுற்றுலாப் பயணிகளுடனும் கலந்துரையாடினார்.லிட்டில் இந்தியா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தீபாவளி சந்தையில் பல்வேறு உணவு வகைகள், பாரம்பரிய ஆடைகள், பண்டிகைக்குத் தேவையான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி பண்டிகைக் கோலம் பூண்டுள்ளது.

 

தீபாவளியை முன்னிட்டு வணிகர்களின் தயாரிப்புகளையும் விற்பனை நடவடிக்கைகளையும் பார்வையிட்ட ரமணன், அங்கு வருகை தந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவங்களையும் கேட்டறிந்தார்.மேலும், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து தீபாவளிப் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வது மலேசியாவின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கமும் பரஸ்பர புரிந்துணர்வும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இத்தகைய பண்டிகைக் கொண்டாட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.மலேசிய மடானி கோட்பாட்டின் அடிப்படையில், அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடனும் பரஸ்பர மரியாதையுடனும் வாழ்வதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மலாக்கா லிட்டில் இந்தியாவில் காணப்படும் உற்சாகமான சூழல், பண்டிகையின் மீதான மக்களின் எதிர்பார்ப்பையும் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here