சிலாங்கூர் சுற்றுலா கண்காட்சியில் 30,000 வருகையாளர்களை ஈர்க்க Tourism Selangor இலக்கு

அம்பாங் ஜெயா,

இம்மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கோலாலம்பூர்,  பாசார் செனியில் நடைபெவுள்ள சிலாங்கூர் சுற்றுலா கண்காட்சியில்  30,000 பார்வையாளர்களை ஈர்க்க Tourism Selangor இலக்கு நிர்ணயித்துள்ளது.

முப்பதுக்கும் மேற்பட்ட உள்ளூர் கண்காட்சியாளர்கள் பங்கேற்கும்  இந்தக் கண்காட்சியில் சிலாங்கூர் வருகை ஆண்டு 2025 (டி.எம்.எஸ்.2025) பிரச்சாரத்தை முன்னிட்டு சுற்றுலா வாய்ப்புகள், கலாச்சார சலுகைகள் மற்றும் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்வுகள்  இடம்பெறும் என்று அதன் தலைமை நிர்வாக அதிகாரி சுவா யீ லிங் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு சிலாங்கூரில் உள்ள ஒன்பது மாவட்டங்களின்  தனித்துவத்தை எடுத்துக்காட்டும். அதில் கலாச்சார பாரம்பரியம், சிறு மற்றும்  குறு  தொழில்துறையினர் மற்றும் உள்ளூர் கைவினைப்பொருட்கள் கண்காட்சியும் அடங்கும்.

இந்த கண்காட்சியில் இடம்பெறும் இதர கவர்ச்சிகரமான நிகழ்வுகளில்  பட்டறைகள், மீடியா சிலாங்கூரின் நேரடி போட்காஸ்ட் ஒளிபரப்பு,  ஐசாட் அம்டான், லா அகமது மற்றும் பாடாட் கலாச்சாரக் குழுவினரின் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அடங்கும் என்று அவர் கூறினார்.

இங்குள்ள டாமரிண்ட் ஸ்பிரிங்ஸில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களுடன் நடைபெற்ற  Tourism Selangor நிறுவனத்தின் ஹை-டீ சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வில் அவர் இவ்வாறு  கூறினார்.  இந்நிகழ்வில் சுற்றுலா ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம்மும் கலந்து கொண்டார்.

கடந்த மார்ச் மாத நிலவரப்படி, சிலாங்கூர் 17.7 லட்சம் சுற்றுப்பயணிகளை ஈர்த்துள்ளது.  அதில் 72 சதவீதம் பேர் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளாவர். எஞ்சிய 28 விழுக்காட்டினர் பேர் சர்வதேசப் பயணிகளாவர்.

வெளிநாட்டுச் சுற்றுப் பயணிகளில் 19 விழுக்காட்டுடன் சீனா முதலிடம் பெறுகிறது.
அதற்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் (12%), இந்தோனேசியா (6%), ஜப்பான் (5%), இந்தியா (5%) ஆகிய நாடுகள் உள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகளையும் அதன் மூலம்  112 கோடி வெள்ளியை வருமானமாகவும் ஈட்டவும் மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here