ஆட்சிக்கு வந்தால் RM 1.65 கோடி செலவில் முடங்கிய மோனோரயில் திட்டம் குறித்தும் நடவடிக்கை.

(ரெ. மாலினி | மலாக்கா)

மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், மோனோரயில் சேவை உள்ளிட்ட கைவிடப்பட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் முழுமையாக மறுஆய்வு செய்யப்படும் என்று மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் வரிப்பணம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ள மக்களுக்கு முழு உரிமை இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, 1 கோடியே 65 லட்சம் ரிங்கிட் செலவிடப்பட்டு, 2020ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மோனோரயில் திட்டம் குறித்து விரிவான மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என்றார்.

அத்திட்டத்தைப் புதிய முதலீடுகள் மூலம் மீண்டும் செயல்படுத்த முடியுமா அல்லது நிரந்தரமாகக் கைவிட வேண்டுமா என்பது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு பாதியில் கைவிடப்பட்ட திட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, சுற்றுலாத்துறை வளர்ச்சி மற்றும் மலாக்கா மாநிலத்தின் நற்பெயர் ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், அரசாங்க உதவிகள் வழங்கப்படும் நடைமுறைகளில் நிலவும் அதிகாரத்துவச் சிக்கல்கள் மற்றும் முறைகேடுகளைக் களைந்து, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதிசெய்ய பக்காத்தான் ஹராப்பான் உறுதிபூண்டுள்ளதாகவும் அட்லி சஹாரி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here