மறைந்த தொழிலதிபரின் 5 இலட்சம் பங்குகள் முறைகேடாக மாற்றப்பட்டதாகக் குற்றச்சாட்டு! சிங்கப்பூர் தொழிலதிபர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கோலாலம்பூர், 

மறைந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான 5 இலட்சம் நிறுவனப் பங்குகளை வாரிசுகளின் அனுமதியின்றி மற்றொருவருக்கு மாற்றியதாக, சிங்கப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் போ போ லியான் மீது நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

மறைந்த தொழிலதிபர் தா கின் யானுக்குச் சொந்தமான Victoria Island Club Berhad நிறுவனத்தின் 500,000 பங்குகளை, அவரது ஆறு பிள்ளைகளின் அனுமதியின்றி ஜெனிபர் கோக் என்பவருக்கு மாற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி சோலாரிஸ் டுடாமாஸில் உள்ள ஆடம்பரக் குடியிருப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

மறைந்த தொழிலதிபரின் மூத்த மகன் தா ஜின் கியாட்டுடன் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டதாக போ போ லியான் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. எனினும், கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரியுள்ளார்.

இதனையடுத்து, நீதிபதி ரோஸ்லி அகமட் இரண்டு உத்தரவாததாரர்களுடன் RM400,000 பிணைத்தொகையில் அவரை விடுவிக்க அனுமதி வழங்கினார். மேலும், வழக்கின் சாட்சிகளிடம் தலையிடக்கூடாது என்றும், மாதந்தோறும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 8ஆம் தேதி நீதிமன்றத்தில் குறிப்பிடப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here