நஜிப்பின் வீட்டுக்காவலில் DAPக்கு என்னதான் பிரச்சினை? முன்னாள் எம்.பி. ஓங் கியான் மிங் சரமாரிக் கேள்வி!

பெட்டாலிங் ஜெயா, 

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு வீட்டுக்காவல் அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில், ஜனநாயக செயல் கட்சி (DAP) உண்மையில் எதை எதிர்க்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Keluar Sekejap பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், நஜிப்பின் விவகாரத்தை மன்னிப்பு வாரியத்திற்குக் கொண்டு சென்றது தாமே என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னதாகத் தெரிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், அரச மன்னிப்பு வழங்குவது மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் பிரதமர் கூறியிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

“ஜனநாயக செயல் கட்சி உண்மையில் எதை எதிர்க்கிறது என்பது எனக்கு இன்னும் தெளிவாகவில்லை. நஜிப்பின் விவகாரத்தை மன்னிப்பு வாரியத்திற்குக் கொண்டு சென்ற பிரதமர் அன்வாரின் முடிவையா? மாமன்னர் வழங்கிய அரச மன்னிப்பையா? அல்லது வீட்டுக்காவல் முறையையா?” என ஓங் கியான் மிங் கேள்வி எழுப்பினார்.

மேலும், நஜிப்பின் வீட்டுக்காவலை எதிர்க்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக அந்தோணி லோக்கே அமைச்சர் பதவியிலிருந்து விலகியதற்குப் பதிலாக, அமைச்சரவையிலுள்ள அனைத்து அம்னோ அமைச்சர்களையும் நீக்குமாறு பிரதமருக்கு DAP அழுத்தம் கொடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார்.

அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், நஜிப்பிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அம்னோவின் நிலைப்பாட்டைப் பிரதமர் ஏற்கவில்லை என்பதை வெளிப்படுத்தியிருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

SRC International ஊழல் வழக்கில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நஜிப் ரசாக், நவம்பர் 10ஆம் தேதி காஜாங் சிறையிலிருந்து கோலாலம்பூரிலுள்ள லங்காக் டூத்தா இல்லத்திற்கு மாற்றப்பட்டார். அவர் எஞ்சிய தண்டனைக் காலத்தை வீட்டுக்காவலில் அனுபவித்து வருகிறார். அவரது தண்டனைக் காலம் 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

நஜிப்பின் வீட்டுக்காவலைத் தொடர்ந்து DAP பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கே போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருந்த நிலையில், அக்கட்சியின் நிலைப்பாடு குறித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here