மலாக்கா,
மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் இன்று நண்பகல் 12 மணி நிலவரப்படி 40.32 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் நேர டி கண்காணிப்புத் தகவலின்படி, இதுவரை 2 இலட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் செர்காம் தொகுதி 46.65 விழுக்காட்டுடன் அதிக வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், பண்டார் ஹிலிர் தொகுதியில் மிகக் குறைவாக 35.26 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன.
இத்தேர்தலில் 28 தொகுதிகளுக்கு 79 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 6 இலட்சத்து 87 ஆயிரத்து 697 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், 70 விழுக்காடு வாக்குப்பதிவை எட்டத் தேர்தல் ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாநிலம் முழுவதும் 240 வாக்குப்பதிவு மையங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் 21 தொகுதிகளையும், பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனல் 2 தொகுதிகளையும் கைப்பற்றியிருந்தது.




















