பெட்டாலிங் ஜெயா,
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டிபெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிருக்கு எதிராக முன்னதாகத் தெரிவித்த ஆட்சேபனைகளை மீட்டுக்கொண்டு, அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க மாநில மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலாய் ஆட்சியாளர்களின் முத்திரைக் காப்பாளர் சையத் டேனியல் சையத் அஹ்மட்டை இவ்வாரத் தொடக்கத்தில் சந்தித்த இஸ்மாயில் லாசிம், துவாங்கு முஹ்ரிஸின் பதவி தொடர்பாக முன்னர் எழுப்பிய ஆட்சேபனைகளைத் திரும்பப் பெறும் கடிதத்தைச் சமர்ப்பித்ததாக Malay Mail செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், துவாங்கு முஹ்ரிஸை நேரில் சந்தித்து தனது விசுவாசத்தை வெளிப்படுத்துவதுடன், மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கான ஒப்புதலையும் அவர் கோரவுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக ஒத்திவைக்கப்பட்ட சட்டமன்றக் கூட்டம் நவம்பர் 26ஆம் தேதி தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே, பதவியிலிருந்து நீக்கப்பட்ட பத்து மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களும் துவாங்கு முஹ்ரிஸுக்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சியாளர் பதவி தொடர்பாக உருவான சர்ச்சை, தொடர்ந்து அரசியல் மற்றும் அரசமைப்புச் சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது. அக்டோபர் 16ஆம் தேதி இஸ்மாயில் லாசிமின் முந்தைய நிலைப்பாட்டை துவாங்கு முஹ்ரிஸ் பகிரங்கமாகக் கண்டித்திருந்தார்.
இந்நிலையில், மந்திரி பெசாரின் தற்போதைய நிலைப்பாடு மாற்றம், மாநிலத்தில் நீடித்து வரும் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்தத் தகவல்கள் குறித்து இஸ்மாயில் லாசிமின் நேரடி உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை.





















