கோலாலம்பூர்,
தாய்லாந்தில் 240 கிலோகிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து மலேசியர்களில் இருவருக்கு ஏற்கெனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த புதன்கிழமை தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் 34 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.
கெடா மாநிலத்தைச் சேர்ந்த 37 மற்றும் 39 வயதுடைய இருவருக்கு முறையே மூன்று மற்றும் ஒரு போதைப்பொருள் தொடர்பான குற்றப் பதிவுகள் இருப்பதாகவும், ஏனைய மூவருக்கு அத்தகைய குற்றப் பதிவுகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்ட ஐந்து மலேசியர்களும் கடந்த அக்டோபர் 24 முதல் நவம்பர் 9ஆம் தேதி வரையிலான காலப்பகுதியில், கெடா மாநிலத்தின் புக்கிட் காயு ஹித்தாம் எல்லைச் சோதனைச் சாவடி வழியாகத் தாய்லாந்திற்குள் நுழைந்திருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான உளவுத் தகவல்களின் அடிப்படையில், தாய்லாந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, காவல்துறை மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து நான்கு இடங்களில் அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டனர்.
தாய்லாந்தின் பிரசுவாப் கிரி கான் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சோதனையின்போது, கறுப்பு நிற Toyota Alphard வாகனத்திலிருந்து 120 கிலோகிராம் மெத்தாம்பெட்டமின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு மலேசியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது சோதனையின்போது மற்றொரு கறுப்பு நிற Toyota Alphard வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 120 கிலோகிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இந்த நடவடிக்கைகளில் 24 மற்றும் 25 வயதுடைய இரண்டு தாய்லாந்துப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, மொத்தம் ஐந்து மலேசியர்களும் இரண்டு தாய்லாந்துப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, இந்தப் போதைப்பொருள் கடத்தல் கும்பலை மலேசியாவில் உள்ள முக்கிய நபர்கள் இயக்கி வந்ததாகத் தாய்லாந்து அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
ஒவ்வொரு வெற்றிகரமான போதைப்பொருள் விநியோகத்திற்கும் 5 இலட்சம் முதல் 10 இலட்சம் தாய்லாந்து பாட் வரை (சுமார் RM61,000 முதல் RM122,000) வழங்கப்படும் எனச் சந்தேக நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, மலேசியாவில் செயல்படும் இந்தக் கடத்தல் கும்பலின் தொடர்புகளை அடையாளம் காண்பதற்காக கெடா மற்றும் பெர்லிஸ் காவல்துறையினருடன் இணைந்து தாய்லாந்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.





















