கோலாலம்பூர்,
மலேசியாவில் பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கும் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து, அவர்களின் வங்கிக் கணக்குகளை இணைய மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வெறும் RM40 போன்ற சிறிய தொகைகளை வழங்கி, அவர்களின் வங்கிக் கணக்குகளை மோசடி கும்பல்கள் பயன்படுத்தி வருவதாக மலேசிய அனைத்துலக மனிதாபிமான அமைப்பின் (MHO) பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
கிள்ளான் பள்ளத்தாக்கு, சிலாங்கூர் மற்றும் பினாங்கு உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் போக்கு அதிகமாகக் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
அன்றாடச் செலவுகளுக்கே பணமின்றித் தவிக்கும் மாணவர்களின் பொருளாதார நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தி, பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களின் வங்கித் தகவல்களை மோசடி கும்பல்கள் பெற்றுக்கொள்வதாக அவர் விளக்கினார்.
முன்னர் வங்கி ஏடிஎம் அட்டைகளை வாடகைக்கு எடுப்பது அல்லது வாங்குவது போன்ற முறைகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது இணையத்தின் மூலம் எளிதாகத் திறக்கக்கூடிய டிஜிட்டல் வங்கிக் கணக்குகளை மோசடி கும்பல்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
சுயபடம் (Selfie) மற்றும் அடையாள அட்டையின் நகல் போன்ற குறைந்த அளவிலான ஆவணங்களைக் கொண்டு சில டிஜிட்டல் வங்கிக் கணக்குகளைத் திறக்க முடிவதால், மோசடி கும்பல்கள் தங்களது செயல்முறைகளை மாற்றியமைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பகுதிநேர வேலைவாய்ப்பு, பணம் வழங்கப்படும் கருத்துக்கணிப்புகள் மற்றும் கல்விக் கடன் உதவிகள் போன்ற விளம்பரங்கள் மூலமாக மாணவர்கள் இந்த மோசடி வலையில் சிக்கவைக்கப்படுகின்றனர்.
சில சந்தர்ப்பங்களில், வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடைமுறை எனக் கூறி மாணவர்களிடம் புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
கணக்கைத் திறந்த பின்னர் வேலை கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படும் நிலையில், அந்த வங்கிக் கணக்குகள் பின்னர் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்குத் தெரியாமல் போகிறது.
இதேபோன்று, கருத்துக்கணிப்புகளில் பங்கேற்பதற்காகத் தனிப்பட்ட தகவல்களை வழங்கும் மாணவர்களின் விவரங்களும் அவர்களுக்குத் தெரியாமல் வங்கிச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிதியுதவி அல்லது கடன் வழங்குவதாகக் கூறி, மாணவர்களின் இணைய வங்கிக் கணக்கு பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்களைப் பெற்றுக்கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
பணத் தேவையால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் இத்தகைய கோரிக்கைகள் குறித்து சந்தேகம் எழுப்பாமல் தங்களது தகவல்களை வழங்கிவிடுவதாக ஹிஷாமுடின் குறிப்பிட்டார்.
பல மாணவர்கள் தங்களது வங்கிக் கணக்குகள் மோசடி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டிருப்பதை, காவல்துறையினர் விசாரணைக்கு அழைக்கும்போதோ அல்லது மோசடிப் புகார்களைத் தொடர்ந்து வங்கிக் கணக்குகள் முடக்கப்படும்போதோதான் அறிந்துகொள்கின்றனர்.
இதனால் அவர்கள் நிதி இழப்புகளை மட்டுமின்றி, குற்றவியல் விசாரணைகள் மற்றும் எதிர்காலத்தைப் பாதிக்கக்கூடிய சட்டரீதியான விளைவுகளையும் எதிர்கொள்ள நேரிடலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்குத் தனது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த அனுமதித்ததை ஒப்புக்கொண்ட சட்டத்துறை மாணவர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவமும், இணைய மோசடி கும்பலுக்காக வங்கிக் கணக்கை வழங்கியதாக மற்றொரு கல்லூரி மாணவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவமும் நீதிமன்றங்களில் பதிவாகியுள்ளன.
இதனிடையே, மாணவர்களின் வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்காக மாதந்தோறும் RM1,000 முதல் RM2,000 வரை வழங்குவதாக மோசடி கும்பல்கள் ஆசைகாட்டுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் முன்னதாக எச்சரித்திருந்தார்.
எனவே, மாணவர்கள் வேலைவாய்ப்பு அல்லது நிதியுதவி என்ற பெயரில் தங்களது வங்கிக் கணக்கு விவரங்கள், கடவுச்சொற்கள் மற்றும் தனிப்பட்ட தகவல்களைப் பிறரிடம் வழங்குவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.























