ஈப்போ:
பேராக் மாநிலத்தின் ஈப்போவில் இன்று அதிகாலை போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில், பல மாநிலங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் கும்பலின் முக்கியத் தலைவன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள அந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் நான்கு பேரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர் 39 வயதுடைய மலேசிய ஆடவர் என்றும், அவருக்கு ஏற்கெனவே 17 குற்றப் பதிவுகள் இருப்பதாகவும் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ எம். குமார், இன்று பேராக் மாநில போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் லெம்பா பெர்பாடுவான் பகுதியில் சந்தேகத்திற்கிடமாகச் சென்ற வெள்ளி நிற பெரோடுவா அல்சா காரை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால், போலீசாரின் உத்தரவைப் புறக்கணித்த ஓட்டுநர் அதிவேகமாகத் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து போலீசார் காரைத் துரத்திச் சென்றபோது, சிறிய மோதலுக்குப் பின்னர் அந்த வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது.
காரிலிருந்து இறங்கிய சந்தேக நபர் போலீசாரை நோக்கிப் பலமுறை துப்பாக்கியால் சுட்டதாகவும், தற்காப்புக்காக போலீசார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாகவும் குமார் விளக்கினார்.
சாலையோர வடிகாலுக்கு அருகில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்து ஒரு கைத்துப்பாக்கி, மூன்று தோட்டாக்கள், பயன்படுத்தப்பட்ட ஆறு தோட்டா உறைகள் மற்றும் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் படிக வடிவிலான தூள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
மேலும், அவரது காரைச் சோதனையிட்டபோது மூன்று பாராங் கத்திகள், இரண்டு இரும்புக் கம்பிகள், உலோக வெட்டுக் கருவி, முகமூடிகள், கையுறைகள், வாகனப் பதிவெண் தகடுகள் மற்றும் போதைப்பொருள் எனச் சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சுட்டுக்கொல்லப்பட்ட நபர் ஆயுதக் கொள்ளை, வீடு புகுந்து திருடுதல், போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் கடுமையான காயங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.




















