நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடி! அரசியலமைப்பில் குறுக்கு வழிக்கு இடமில்லை – முகமட் ஹசான் திட்டவட்டம்!

சிரம்பான், 

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாநில நிர்வாகம் தொடர்பான எந்தவொரு முடிவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட வேண்டும் என்று தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் வலியுறுத்தியுள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் குறுக்கு வழிகளுக்கு இடமில்லை என்றும், அனைத்து நடவடிக்கைகளும் முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றியே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

நெகிரி செம்பிலான் மாநில தேசிய முன்னணி மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிகளைச் சேர்ந்த அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படும் முக்கியக் கூட்டத்திற்காக, சிரம்பானில் உள்ள அம்னோ தலைமையகத்திற்கு வந்தபோது அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

“இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவே நான் இங்கு வந்துள்ளேன்,” என்று முகமட் ஹசான் கூறினார்.

மாநில அரசியல் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அவர் தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நமது நாடு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு. சட்டத்தின் ஆட்சியே இங்கு முக்கியமானது. எனவே, அனைத்து நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

“அரசியலமைப்பில் குறுக்கு வழிகள் கிடையாது. சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுங்கள். அவசரப்பட்டு குறுக்கு வழிகளை நாட வேண்டாம்.

“அனைத்தும் முறையாக மேற்கொள்ளப்பட்டால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று நம்புகிறேன்,” என அவர் தெரிவித்தார்.

இதனிடையே, நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிமின் பதவி தொடர்பாக ஏற்பட்டுள்ள சர்ச்சை, மாநில அரசியலில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்மாயில் லாசிம், மாநில நிர்வாகம் தடையின்றித் தொடர்வதற்காகத் தம்மை மந்திரி பெசார் பதவியில் தொடர்ந்து பணியாற்றுமாறு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் அறிவுறுத்தியதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், தனது பதவி விலகல் கடிதத்தை ஆட்சியாளரிடம் தாம் சமர்ப்பிக்கவில்லை என்றும், அதனைச் சமர்ப்பிப்பதற்குத் தாம் ஒப்புதல் வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அந்தக் கடிதம் கட்சித் தலைமையிடம் இருந்ததாகவும் இஸ்மாயில் விளக்கமளித்தார்.

இஸ்தானா விளக்கம் – பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும்!

இருப்பினும், இஸ்மாயில் லாசிம் தொடர்ந்து மந்திரி பெசாராகப் பதவி வகிக்குமாறு ஆட்சியாளர் அறிவுறுத்தவில்லை என்று நெகிரி செம்பிலான் அரண்மனை பின்னர் விளக்கமளித்தது.

மாநில அரசியலமைப்பு விதிகளுக்கு ஏற்ப, மந்திரி பெசார் பதவியில் தொடர்வதற்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தமக்கு இருப்பதை இஸ்மாயில் நிரூபிக்க வேண்டும் என்றும் அரண்மனை வலியுறுத்தியுள்ளது.

அரண்மனை நிர்வாக அதிகாரி டத்தோ அஸிஸி முகமட் அலி வெளியிட்ட விளக்கத்தில், இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டார்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி இரவு, இஸ்மாயில் லாசிம் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகியதாக தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காதிர் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அரசியல் சர்ச்சை தொடங்கியது.

மந்திரி பெசாரின் பதவி விலகல் கடிதத்தின் நகலை தேசிய முன்னணித் தலைவரும் அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி பெற்றிருந்ததாகவும் ஸம்ரி தெரிவித்திருந்தார்.

எனினும், மந்திரி பெசாரின் பதவி விலகல் மாநில அரசியலமைப்பின்படி ஆட்சியாளரின் ஒப்புதலுடன் மட்டுமே நடைமுறைக்கு வரும் என்று அரண்மனை ஏற்கெனவே விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில், மந்திரி பெசாரின் பதவி தொடர்பான முரண்பட்ட தகவல்களுக்கு மத்தியில், முகமட் ஹசான் தலைமையில் நடைபெறும் புதிய பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மாநில அரசியல் நெருக்கடிக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here