மறுசுழற்சிப் பொருட்கள் வழி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் – ஙா கோர் மிங்

புத்ராஜெயா, 

திடக்கழிவு நிர்வாகம் மற்றும் பொதுத் துப்புரவுக் கழகத்தின் (SWCorp) கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ‘Trash to Cash’ திட்டத்தின் வாயிலாக, இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில் 3.24 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான விற்பனை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் 8.7 மில்லியன் கிலோகிராமுக்கும் அதிகமான மறுசுழற்சிப் பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

திடக்கழிவுகள் வெறுமனே தூக்கி எறியப்படும் பொருட்கள் அல்ல. மாறாக, மறுசுழற்சி நடவடிக்கைகளின் வாயிலாகப் பொருளாதார வருமானத்தை ஈட்டித் தரக்கூடிய வளங்களாகவும் அவை விளங்குகின்றன என்பதற்கு இச்சாதனை சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

“மறுசுழற்சி நடவடிக்கைகள் குப்பை அக  ற்றும் மையங்களுக்கு அனுப்பப்படும் கழிவுகளின் அளவைக் குறைப்பது மட்டுமின்றி, பொதுமக்களின் தீவிரப் பங்களிப்பின் வாயிலாகப் பொருளாதாரப் பயன்களையும் ஏற்படுத்துகின்றன என்பதை இத்திட்டம் நிரூபித்துள்ளது.

“கழிவுகளை அவை உருவாகும் இடத்திலேயே வகைப்படுத்திப் பிரிக்கும் நடைமுறையையும் மறுசுழற்சிப் பழக்கத்தையும் மேலும் வலுப்படுத்த வேண்டும். இதற்கு அரசாங்கம், தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்,” என்றார் அவர்.

புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான நிலைத்தன்மைமிக்க திடக்கழிவு நிர்வாக மாநாடு மற்றும் கண்காட்சியின் (SWAM 2026) நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

2030க்குள் 48 விழுக்காடு இலக்கு

நாட்டின் சுழற்சிப் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் 48 விழுக்காடு திடக்கழிவுகள் குப்பை அகற்றும் மையங்களுக்கு அனுப்பப்படுவதைத் தவிர்க்க மடானி அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

2014ஆம் ஆண்டில் 13.2 விழுக்காடாக இருந்த நாட்டின் மறுசுழற்சி விகிதம், 2024ஆம் ஆண்டில் 37.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், மறுபயன்பாட்டுக்குரிய பொருட்களை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதோடு, குப்பை அகற்றும் மையங்களைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் அவசியமாகின்றன என்று ஙா கோர் மிங் குறிப்பிட்டார்.

“மறுசுழற்சி விகிதத்தை அதிகரிப்பது மட்டுமே நமது சவால் அல்ல. மீட்டெடுக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் பொருளாதார மதிப்பையும் சந்தை வாய்ப்பையும் உருவாக்கக்கூடிய ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

“திறன்மிக்க கழிவு சேகரிப்பு முறை, நவீன பதனிடும் வசதிகள் மற்றும் பொருத்தமான தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவை இதற்கு உறுதுணையாக அமைய வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

SWAM 2026 மாநாட்டில் 500 பங்கேற்பாளர்கள்

நவம்பர் 24ஆம் தேதி தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற்ற SWAM 2026 மாநாடு, 2024ஆம் ஆண்டில் முதன்முறையாக நடத்தப்பட்டதைத் தொடர்ந்து இம்முறை இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இம்மாநாட்டில் 500 பங்கேற்பாளர்கள், 17 பேச்சாளர்கள், எண்மர் கொண்ட கலந்துரையாடல் குழு உறுப்பினர்கள், 38 கண்காட்சியாளர்கள் மற்றும் 1,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் இடம்பெற்றனர்.

எதிர்காலத் தலைமுறையினருக்கான நிலைத்தன்மைமிக்க சூழலை உருவாக்கும் கருப்பொருளில் நடைபெற்ற இம்மாநாட்டில், கழிவுகளிலிருந்து எரிசக்தியை மீட்டெடுத்தல், உணவுக் கழிவுகளைப் பதனிடுதல், தானியங்கி கழிவு சேகரிப்புத் தொழில்நுட்பம் மற்றும் குப்பை அகற்றும் மையங்களின் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

மேலும், SWCorp, மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் (UPM), KPT Recycle Sdn. Bhd. மற்றும் Tetra Pak Malaysia ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டன.

நாட்டின் திடக்கழிவு நிர்வாகத்தை நவீனமயமாக்குவதற்கும், மதிப்புமிக்க கழிவுப் பொருட்களை மீண்டும் பயனுள்ள வளங்களாக மாற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனான ஒத்துழைப்பை வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு தொடர்ந்து வலுப்படுத்தும்.

இதன் வாயிலாகச் சுற்றுச்சூழலின் நிலைத்தன்மையையும் மக்களின் நல்வாழ்வையும் உறுதிப்படுத்த முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here