ஹலால் சான்றிதழ்: எந்தத் தரப்பையும் கட்டாயப்படுத்தக்கூடாது: துணைப் பிரதமருக்கு இந்து சங்கம் பாராட்டு

பெட்டாலிங் ஜெயா :

லால் சான்றிதழ் தொடர்பில் எந்தத் தரப்பினரையும் கட்டாயப்படுத்தக்கூடாதென்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்திருக்கும் கருத்தை மலேசிய இந்து சங்கம் முழுமனதுடன் வரவேற்பதாக அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்தார்.

நாட்டில் அனைத்து உணவகங்களும் ஹலால் சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று ஜாக்கிங் என்ற மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டு இலாகா பரிந்துரை செய்தது முதல் சமூகத்தின், குறிப்பாக உணவுசார் தொழில் துறையின் பல்வேறு முனைகளில் இருந்து ஐயமும் வினாவும் எழுப்பப்பட்டு வருகின்றன.

 

குறிப்பாக, இந்து அமைப்புகளின் சார்பில் சமய நெறிக்கு ஏற்ப நடத்தப்படும் முழு சைவ உணவகங்களுக்குகூட ஹலால் சான்றிதழ் தேவையா என்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்பட்ட நிலையில், துணைப் பிரதமரின் இந்தக் கருத்து ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

மஇகா-வின் 78ஆவது பொதுப் பேரவையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய அவர், சமய-சமூக நல்லிணக்கம் குறித்தும் பேசினார்.

மாறுபட்ட அரசியல் சூழலில் நாட்டில் நிலவும் ஒற்றுமை அரசாங்கம் தொடரவும் நாடும் மக்களும் மேலும் மறுமலர்ச்சி காணவும் சமய சகிப்புத்தன்மை எல்லா மட்டத்திலும் அவசியம் என்று துணைப் பிரதமர் வலியுறுத்திய கருத்தையும் வரவேற்பதாக மலேசிய சர்வ சமய ஆலோசனை மன்ற உறுப்பினருமான ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here