ஜனவரி 1 முதல் 2027 பட்ஜெட்டை அமல்படுத்த வேண்டும் பிரதமர் அன்வார் உத்தரவு

புத்ராஜெயா,

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களும் மேம்பாட்டுப் பணிகளும் எவ்விதத் தாமதமுமின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யும் வகையில், வரும் ஜனவரி 1ஆம் தேதி முதலே பட்ஜெட் அமலாக்கப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

பட்ஜெட் அங்கீகரிக்கப்படுவதற்கு ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதாக அவர் கூறினார்.

“கொள்கை மற்றும் குழுநிலை விவாதங்களின்போது பல்வேறு கருத்துகள், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

“அடுத்த ஆண்டு செலவிடுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட மக்களின் பணம் முறையாகவும் பயனுள்ள வகையிலும் செலவிடப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதை உறுதிசெய்வதே தற்போது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும்.

“எந்தவிதத் தாமதத்தையும் பிரதமர் விரும்பவில்லை. திட்டமிடப்பட்டுள்ள பணிகளை 2027 ஜனவரி 1 அல்லது 2ஆம் தேதி முதலே தொடங்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்,” என ஃபாமி தெரிவித்தார்.

இங்கு இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.

அரசாங்கத்தின் அனைத்துத் திட்டங்களும் மக்களுக்குப் பயனளிப்பதோடு, நாட்டின் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை உறுதிசெய்ய திறமையான, இலக்கை நோக்கிய அமலாக்கம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, மொத்தம் 510 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு மற்றும் முதலீடுகளை உள்ளடக்கிய 2027ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மசோதா, மூன்றாவது வாசிப்புக்குப் பின்னர் எவ்விதத் திருத்தமுமின்றி குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here