கோலா கங்சார்,
மாணவர்களின் நடத்தை மற்றும் உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அவர்களின் மனநலனைக் கண்காணிக்க உதவும் புதிய அணுகுமுறையை MySP AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தியுள்ளது.
மாணவர்களின் வருகைப் பதிவுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில், அவர்களின் வளர்ச்சியையும் மாற்றங்களையும் அவ்வப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் மதிப்பிடுவதற்கு இத்தொழில்நுட்பம் உதவுவதாக MySP AI தலைமைச் செயல்முறை அதிகாரி ஹபேஸ் ஷுரிடின் தெரிவித்தார்.
முக அடையாளத் தொழில்நுட்பத்தின் வாயிலாக மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதோடு மட்டுமின்றி, அவர்களின் முகத்தில் காணப்படும் சோகம், உற்சாகமின்மை போன்ற மாற்றங்களையும் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாக அடையாளம் காண முடியும் என்று அவர் கூறினார்.
இத்தகைய மாற்றங்களை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலம் பெற்றோர்களும் ஆசிரியர்களும் விரைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதன்வழி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழும் அபாயத்தைக் குறைக்க உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இங்குள்ள ஷேக் இத்ரிஸ் அல்-மர்பாவி தேசியப் பள்ளியில் நேற்று நடைபெற்ற MySP மற்றும் Touch ‘n Go Digital (TNGD) மாணவர் பாதுகாப்புத் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் MySP AI மற்றும் Touch ‘n Go Digital நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஆவணங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இந்த ஒத்துழைப்பின் மூலம் Touch ‘n Go eWallet மின்னியல் பணப்பரிவர்த்தனை வசதி MySP AI செயல்முறையில் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
194 பள்ளிகளில் 55,000 மாணவர்கள் பயனடைகின்றனர்
இத்தொழில்நுட்பத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஹபேஸ், திறன்பேசி கேமரா மூலம் மாணவர்களின் முகம் பதிவு செய்யப்பட்டு, முக அடையாளத் தொழில்நுட்பத்தின் வாயிலாக அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படுவதுடன் பள்ளி வருகையும் பதிவு செய்யப்படுவதாகக் கூறினார்.
மாணவர்களின் வருகை, ஒழுக்கம், நற்பண்புகள் மற்றும் பல்வேறு நடவடிக்கைகளில் அவர்களின் பங்கேற்பு தொடர்பான அறிக்கைகளைத் தயாரிக்க இத்தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
பொதுவாகப் பள்ளியின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்படும் முக அடையாளப் பதிவு, நான்கு மீட்டர் தூரம் வரை செயல்படுவதுடன் ஒன்று முதல் ஒன்றரை விநாடிகளுக்குள் நிறைவடைகிறது.
மாணவர்களின் வருகை, ஒழுக்கம், நன்னடத்தை உள்ளிட்ட பதிவுகளை ஒருங்கிணைந்த கல்வி நிர்வாக முறை (MOEIS) வாயிலாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் நேரடியாகப் பார்வையிட முடியும்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட இத்தொழில்நுட்பம் தற்போது நாடு முழுவதும் 194 பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன் சுமார் 55,000 மாணவர்கள் இதன் மூலம் பயனடைந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
முக அடையாளம் மூலம் பள்ளிச் சிற்றுண்டிச்சாலையில் பணம் செலுத்தும் வசதி
Touch ‘n Go Digital நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் மூலம், பெற்றோர்களின் மின்னியல் பணப்பைக் கணக்குடன் இணைக்கப்பட்ட முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாணவர்கள் பள்ளிச் சிற்றுண்டிச்சாலைகளில் பொருட்களை வாங்க முடியும்.
இதன்வழி மாணவர்கள் பள்ளிக்குப் பணத்தையோ திறன்பேசியையோ கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பதுடன், அவர்களின் கைச்செலவுப் பணம் தொலைந்துபோகும் அபாயமும் குறையும்.
மேலும், தங்களது பிள்ளைகளின் அன்றாடச் செலவினப் பதிவுகளையும் பள்ளியில் அவர்களின் பாதுகாப்பையும் பெற்றோர்கள் எளிதாகவும் வெளிப்படையாகவும் நேரடியாகக் கண்காணிக்க முடியும் என்று ஹபேஸ் தெரிவித்தார்.























