புத்ராஜெயா,
பொது வீடமைப்பு மற்றும் மலிவு விலை வீடமைப்புத் துறைகளில் மலேசியாவுக்கும் புருணை தாருஸ்ஸலாமுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது.
புருணை தாருஸ்ஸலாம் மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ செத்தியா அவாங் ஹாஜி முகமது ஜுவாண்டா பின் ஹாஜி அப்துல் ரஷிட் தலைமையிலான பேராளர் குழுவினர் இன்று மலேசிய வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சுக்கு (KPKT) அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டனர்.
இச்சந்திப்பு, பொது வீடமைப்பு மற்றும் மலிவு விலை வீடமைப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதில் இரு நாடுகளும் தங்களது அனுபவங்கள், நிபுணத்துவம் மற்றும் சிறந்த அணுகுமுறைகளைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிப்பதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
குறிப்பாக, மக்கள் தரமான, வசதியான வீடுகளைப் பெறுவதை உறுதி செய்வதில் இந்த ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
“அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, நிலையான மற்றும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் வீடமைப்பு மேம்பாட்டை உறுதி செய்வதில் மலேசியாவும் புருணை தாருஸ்ஸலாமும் ஒரே நோக்கத்தைக் கொண்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான அனுபவம் மற்றும் நிபுணத்துவப் பகிர்வு, மேலும் பல ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவதோடு, வீடமைப்புத் துறையில் எதிர்நோக்கும் சவால்களுக்குத் தீர்வு காண சிறந்த அணுகுமுறைகளை ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.
மலேசிய வீடமைப்புத் திட்டங்களைப் பார்வையிடும் புருணை பேராளர்கள்
நவம்பர் 25 முதல் 28ஆம் தேதி வரை மலேசியாவில் அலுவல் பயணம் மேற்கொண்டுள்ள புருணை பேராளர் குழுவினர், நாட்டின் பல்வேறு வீடமைப்புத் திட்டங்களையும் பார்வையிடுகின்றனர்.
மக்கள் நட்புறவு வீடமைப்புத் திட்டம் (RMR), மலாக்கா, கிளேபாங்கில் உள்ள மக்கள் குடியிருப்புத் திட்டம் (PRR) மற்றும் கோலாலம்பூரில் உள்ள தனியார் வீடமைப்பு மேம்பாட்டுத் திட்டமான SkyAwani 5 ஆகியவை இதில் அடங்கும்.
பொது மற்றும் மலிவு விலை வீடுகளை மக்களுக்கு வழங்குவதில் மலேசியா பின்பற்றி வரும் அணுகுமுறைகள், வீடமைப்புக் கொள்கைகளின் அமலாக்கம், நிதியுதவி முறைகள் மற்றும் வீடமைப்பு மேம்பாட்டில் தனியார் துறையின் பங்களிப்பு ஆகியவற்றை நேரடியாக அறிந்துகொள்ள இப்பயணம் வாய்ப்பளிக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பேராக், ஈப்போவில் நடைபெற்ற கட்டுமானம் மற்றும் வீடமைப்பு தொடர்பான ஆசியான் – சீனா அமைச்சர்கள் நிலையிலான வட்டமேசைக் கூட்டத்தின்போது (ACMROCH) மலேசியாவுக்கும் புருணைக்கும் இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின் தொடர்ச்சியாக இவ்வருகை அமைந்துள்ளது.
இவ்வருகையின் மூலம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன், நிபுணத்துவப் பகிர்வை விரிவுபடுத்தி, முன்னேற்றகரமான, நிலையான மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வீடமைப்புத் துறையை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பு வாய்ப்புகள் அதிகரிக்கும் என வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு நம்பிக்கை தெரிவித்துள்ளது.























