மஇகா ஆட்சியாளர்களின் சட்ட விலக்குரிமை தொடர்பான 1993ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தங்களை மறுஆய்வு செய்ய கோரிக்கை

மலாய் ஆட்சியாளர்களின் சட்ட விலக்குரிமை தொடர்பான 1993-ஆம் ஆண்டு அரசியலமைப்புத் திருத்தங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) வலியுறுத்தியுள்ளது. இந்தத் திருத்தங்களுக்கு ‘ஆட்சியாளர்கள் பேரவை’யின் (Conference of Rulers) ஒப்புதல் பெறப்படவில்லை என்பதே இதற்குக் காரணமாகும்.

2020ஆம் ஆண்டிலும் இதே கோரிக்கையை முன்வைத்த MIC தலைவர் எஸ். விக்னேஸ்வரன், கூட்டாட்சி அரசியலமைப்பின் 38(4) மற்றும் 159(5) ஆகிய பிரிவுகளின்படி, ஆட்சியாளர்களின் சலுகைகளைப் பாதிக்கும் சட்டங்கள் மற்றும் சில அரசியலமைப்பு விதிகளில் திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு ஆட்சியாளர்கள் பேரவையின் ஒப்புதல் கட்டாயம் என்று குறிப்பிட்டார்.

இருப்பினும், 1993ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று, அப்போதைய மக்களவைத் தலைவர் (Dewan Rakyat Speaker), ஆட்சியாளர்கள் பேரவையின் முத்திரையைக் காப்பவரிடமிருந்து (Keeper of the Rulers’ Seal) ஒரு கடிதம் வந்ததாகவும், அதில் ஆட்சியாளர்கள் பேரவை இந்த மசோதாவை நிராகரித்துவிட்டதாகவும் அவையில் தெரிவித்ததாக நாடாளுமன்றப் பதிவுகள் (Hansard) காட்டுகின்றன.

ஆட்சியாளர்கள் பேரவையின் ஒப்புதல் இன்றி இந்த மசோதாவைக் கொண்டுவருவதற்கு மறுநாளும் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன.ஆனால் அந்தத் திருத்தச் செயல்முறை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது என்று அவர் கூறினார். ஜோகூரில் நடைபெற்ற கட்சியின் 80ஆவது தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், “இந்த விவகாரம் தீவிர கவனத்திற்குரியது என்று நான் கருதுகிறேன். ஆட்சியாளர்களுக்கு முழுமையான அதிகாரத்தை மீண்டும் வழங்குவது குறித்து நாங்கள் பேசவில்லை. மாறாக, கூட்டாட்சி அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ள அசல் ஒப்புதலை மதிப்பது குறித்தே நாங்கள் பேசுகிறோம் என்று தெரிவித்தார்.

ஆட்சியாளர்களுக்கு முழுமையான அதிகாரத்தை மீட்டுக் கொடுப்பது  மஇகாவின் நோக்கம் அல்ல என்றும், மாறாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட அசல் உடன்படிக்கையை நிலைநிறுத்துவதே அதன் நோக்கம் என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தினார். கூட்டாட்சி அரசியலமைப்பு என்பது, அந்தந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை விட மேலானதாக இருக்க வேண்டும். எந்தப் பெரும்பான்மையும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டது அல்ல, மேலும் எந்தவொரு அரசியலமைப்புப் பாதுகாப்பும் விருப்பத்திற்குரியதாகக் கருதப்படக்கூடாது என்று அவர் கூறினார்.

1993ஆம் ஆண்டு திருத்தம், சிவில், குற்றவியல் நடவடிக்கைகளிலிருந்து ஆட்சியாளர்களுக்கு இருந்த தனிப்பட்ட விலக்களிப்பை நீக்கியதுடன் அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றத்தையும் நிறுவியது. முதல் மசோதா 1993 ஜனவரியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, ஆனால் ஆட்சியாளர்கள் மாநாடு தனது ஒப்புதலை வழங்க மறுத்தது. திருத்தப்பட்ட மசோதா மார்ச் 8 அன்று தாக்கல் செய்யப்பட்டு, மறுநாள் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திருத்தங்கள் 1993 மார்ச் 30 அன்று நடைமுறைக்கு வந்தன. அரசியலமைப்புச் சட்ட அறிஞர் ஷாத் சலீம் ஃபாரூக், இந்த விவகாரம் கடுமையான அரசியலமைப்புச் சட்டக் கேள்விகளை எழுப்புகிறது என்று கூறி, திருத்தங்களின் இறுதி வடிவத்திற்கு ஆட்சியாளர்கள் மாநாட்டின் ஒப்புதல் பெறப்பட்டதா என்று முன்னர் கேள்வி எழுப்பியிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here