கோலாலம்பூரின் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் பாதிப்பு

கோலாலம்பூர்: கனமழை  பலத்த காற்றைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் தலைநகரின் செந்தூல்,ஸ்தாக்காப், கம்போங் பாரு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (JBPM) செயல்பாட்டு மையம், ஜாலான் செந்தூல் செலத்தானில் உள்ள செந்தூல் மருத்துவ மையத்திற்கு அருகே திடீர் வெள்ளத்தில் சிக்கிய கார் குறித்து மாலை 4.01 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.

செந்தூல் தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து ஆறு பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர் வெற்றிகரமாக மீட்கப்பட்டதாகவும் அது கூறியது. இதற்கிடையில், கோலாலம்பூர், செராஸ், செந்தூல் மாவட்ட குடிமைப் பாதுகாப்பு அதிகாரி, கோலாலம்பூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு செயலகத் தலைவர் அமினுல்லா சுல்கிஃப்ளி, கம்போங் பெரியுக், கம்போங் பாருவில் உள்ள திடீர் வெள்ளப் பகுதிகளைக் கண்காணிக்க மாலை 4.34 மணிக்கு நான்கு பணியாளர்கள் அனுப்பப்பட்டதாகக் கூறினார்.

மாலை 4.54 மணிக்கு நீரை வெளியேற்றுவதற்காக கோலாலம்பூர் மாநகராட்சி பம்புகள் இயக்கப்படுவதற்கு முன்பே அப்பகுதி வெள்ளத்தில் மூழ்கியிருந்ததாகவும், கண்காணிப்புப் பணிகள் மாலை 5.06 மணிக்கு முடிவடைந்ததாகவும் அவர் கூறினார். முன்னதாக, கனமழையின் காரணமாக செந்தூலைச் சுற்றியுள்ள பல முக்கிய சாலைகளிலும் வெள்ளம் சூழ்ந்து, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், அப்பகுதியில் வெள்ள எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

திரெட்ஸ் (Threads) செயலியில் உள்ள பொதுப் பதிவுகளின்படி, செந்துல் மஸ்ஜித் அல்-ஹிதாயாவைச் சுற்றியுள்ள சாலைகள், OTK பல்பொருள் அங்காடிக்கு அருகிலுள்ள செந்தூல் பசார், செந்தூல் தேசியப் பள்ளிக்கு எதிரே உள்ள பகுதிகள்,  ஸ்தாப்பாக் சென்ட்ரலை நோக்கிய ஜாலான் கெந்திங் கிளாங் ஆகியவை பாதிக்கப்பட்ட இடங்களில் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here