கோலாலம்பூர்,
கிழக்குக் கரை மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில், கிழக்குக் கரை ரயில் இணைப்புத் திட்டத்தின் (ECRL) பயணிகள் சேவை வரும் டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாலை வழியாக ஏழு மணி நேரத்திற்கும் அதிகமாக நீடிக்கும் கோம்பாக் – கோத்தா பாரு பயணத்தை, இந்த ரயில் சேவையின் மூலம் சுமார் நான்கு மணி நேரத்தில் மேற்கொள்ள முடியும்.
அண்மையில் ஊடகவியலாளர்களுக்காக நடத்தப்பட்ட சோதனைப் பயணத்தின்போது, காலை 7 மணிக்கு கோம்பாக்கிலிருந்து புறப்பட்ட ரயில், காலை 11 மணிக்கு கோத்தா பாரு நிலையத்தைச் சென்றடைந்தது.
மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ரயிலில் வசதியான இருக்கைகள், மடிக்கக்கூடிய மேசைகள், மின்சார இணைப்புகள், உணவகம், கழிப்பறைகள் மற்றும் தொழுகை அறைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நீண்ட தூரம் பயணிப்போருக்கு பயணக் களைப்பைக் குறைப்பதுடன், அன்றாடப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைக்கவும் இச்சேவை உதவும் என சோதனைப் பயணத்தில் கலந்துகொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மொத்தம் 665 கிலோமீட்டர் நீளமுடைய ECRL ரயில் வழித்தடம் கிளந்தான், திரெங்கானு, பகாங் மற்றும் சிலாங்கூர் ஆகிய நான்கு மாநிலங்களை இணைக்கிறது.






















