தவறாகக் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட சுமதிக்கு RM75,000 இழப்பீடு! அரசாங்கம் வழங்கியது

பெட்டாலிங் ஜெயா, 

குடிநுழைவுத் துறையின் தவறால் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்ட எஸ். சுமதி என்ற 45 வயது தொழிற்சாலைப் பணியாளருக்கு அரசாங்கம் RM75,000 வழங்கியுள்ளது.

கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட இணக்கத் தீர்ப்பின்படி, RM70,000 இழப்பீடும் RM5,000 வழக்குச் செலவும் வழங்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் எம். மனோகரன் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் புதுடில்லிக்குச் செல்லவிருந்த சுமதி, பல மில்லியன் ரிங்கிட் கடன் காரணமாக திவாலானவர் எனக் குடிநுழைவு அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து, விமானத்தில் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. அவருடன் பயணிக்கவிருந்த ஏனைய குடும்ப உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இதனையடுத்து, திவால் துறையிடம் சுமதி மேற்கொண்ட விசாரணையில், அதே பெயரையும் பிறந்த தேதியையும் கொண்ட வேறொரு நபரின் விவரங்கள் தவறாக அவரது பதிவில் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. இருவரது அடையாள அட்டை எண்களின் இறுதி ஆறு இலக்கங்களும் வேறுபட்டிருந்தன.

தவறை ஒப்புக்கொண்ட குடிநுழைவுத் துறை, அவரது பயணத் தடையை நீக்கியதைத் தொடர்ந்து மறுநாள் மாலை அவர் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இச்சம்பவத்தால் நிதி இழப்பு, மன உளைச்சல் மற்றும் அவமானத்தை எதிர்நோக்கியதாகக் கூறி, கடந்த 2023ஆம் ஆண்டு குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக சுமதி வழக்குத் தொடுத்திருந்தார். இந்நிலையில், நீதிமன்றத்தில் எட்டப்பட்ட இணக்கத் தீர்வின்படி அவருக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here