பங்ளாதேஷ் பிரதமர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம்; கண்ணீர்ப்புகை, இரப்பர் குண்டு, கல்வீச்சு

டாக்கா, ஜூலை 30:

பங்ளாதேஷ் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.

தலைநகர் டாக்காவில் சனிக்கிழமை முக்கியமான சாலைகளை மறைத்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் களைக்க காவல்துறையினர் ரப்பர் குண்டுகளையும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் பாய்ச்சினர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிகாரிகளை நோக்கி கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.

பங்ளாதேஷ் பிரதமர் திருவாட்டி ஷேக் ஹசினா பதவி விலக வேண்டும் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சியான பங்ளாதேஷ் தேசிய கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் சென்ற ஆண்டு முதலே தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

பங்ளாதேஷில் அடுத்த ஆண்டு ஜனவரி வாக்கில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதைத் தற்காலிக அரசாங்கம்தான் மேற்பார்வையிட வேண்டும்.

இப்போதைய பிரதமர் பதவி விலகிவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

சனிக்கிழமை நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் சிலர் காயமடைந்ததாக டாக்கா மாநகரக் காவல்துறை பேச்சாளர் ஃபாருக் அகம்மது கூறியதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here