பிரதான எதிர்க்கட்சியின் பொது வேலைநிறுத்தத்துக்கான அழைப்பு மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு மத்தியில், தொடர்ந்து 4-வது முறையாக நாட்டின் பிரதமராக ஷேக் ஹசீனாவை தேர்வு செய்யும், வங்களாதேசத்தின் 12-வது பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அவாமி லீக் கட்சியின் ஷேக் ஹசீனா 2008-ம் ஆண்டு முதல் வங்களாதேசத்தின் பிரதமராக இருந்து வருகிறார், இன்று வாக்குப்பதிவு நடைபெறும் பொதுத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான வங்காளதேச தேசியவாதக் கட்சி (PNB) பொதுவேலை நிறுத்தத்தின் வாயிலாக புறக்கணிப்பதால், ஷேக் ஹசீனா நான்காவது முறையாக வெற்றி பெறத் தயாராக உள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டு வீட்டுக்காவலில் உள்ள முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான PNB தேர்தல் புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது.
நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய நாடு தழுவிய 48 மணி நேர பொது வேலைநிறுத்தத்திற்கு அக்கட்சி அழைப்பு விடுத்திருந்தது. ’சட்டவிரோத அரசு ராஜினாமா செய்ய வேண்டும், கட்சி சார்பற்ற நடுநிலை அரசை நிறுவ வேண்டும், அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் செயல்வீரர்களை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக PNB தெரிவித்துள்ளது.
தேர்தலை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் அங்கு நடந்தேறி வருகின்றன. பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு மையங்களாக நியமிக்கப்பட்ட 5 பள்ளிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஜெஸ்ஸோர் – டாக்கா பெனாபோல் விரைவு ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்டனர்.








