* 2023 வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கு 55.2 பில்லியன் ரிங்கிட் நிதி

பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வரையறுத்துள்ள 2023 வரவுசெலவுத் திட்டத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது மிகத் தெளிவாகப் புலப்படுகின்றது. குறிப்பாக கடந்த 2022ஆம் ஆண்டு கல்விக்கு 52.6 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில் இவ்வாண்டு 55.2 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி நாடாளுமன்றத்தில் 2023 வரவுசெலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த பிரதமர் இதனை கோடிட்டுக்காட்டினார்.
பள்ளி கட்டமைப்பைச் சீரமைக்க 2.3 பில்லியன் ரிங்கிட்
இம்முறை கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் 2.3 பில்லியன் ரிங்கிட் தொகையானது அனைத்துப் பள்ளிகளிலும் கட்டமைப்பு, கற்றல் கற்பித்தல் வசதிகள் போதுமான அளவில் இருப்பதை உறுதிசெய்ய பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் நாடு தழுவிய அளவில் உள்ள 380 பள்ளிகள் (சபா – சரவாக் உட்பட) மோசமான நிலையில் இருப்பதைச் சுட்டிக்காட்டி அவற்றின் கட்டமைப்புத் தரத்தை உயர்த்த 920 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதிலும் கழிப்பறை, மின்சாரக் கம்பிகள் பொருத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்துப் பள்ளிகளிலும் தரமிக்கதாக இருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யும்.இது தவிர மாணவர் தங்குமிடம் கொண்ட வசதி உள்ள பள்ளிகளில் பாழடைந்த தளவாடங்களை மாற்றவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். அதேபோல் தேசியப்பள்ளி, தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளி என அனைத்து நிலையிலான பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை சீரமைப்பதற்கு 900 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பள்ளிகள் கட்டமைப்பு
நாடு தழுவிய அளவில் புதிதாக 7 பள்ளிகளைக் கட்டமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 2023 வரவுசெலவுத் திட்டத்தில் 560 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகின்றது. திரெங்கானுவில் பாயா டுசுன் ஆரம்பப்பள்ளி, சிலாங்கூரில் டெனாய் அலாம் இடைநிலைப்பள்ளி, சபாவில் நபாலு இடைநிலைப்பள்ளி, சரவாக்கில் டுடோங் இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.
ஆர்எம்டி உணவுத் திட்டத்திற்கு 777 மில்லியன் ரிங்கிட்
மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதில் மடானி அரசாங்கம் பெரும் அக்கறைக் கொள்கிறது. இதன் அடிப்படையில் இவ்வாண்டு ஆர்எம்டி எனப்படும் கூடுதல் உணவுத் திட்டத்தில் மொத்தமாக 777 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டு 625 மில்லியன் ரிங்கிட் இந்தத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வேளையில் இம்முறை 152 மில்லியன் ரிங்கிட் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் நிதியின் வழி மொத்தமாக 700,000 மாணவர்கள் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தவிர கல்வி அமைச்சின் பாலர்பள்ளி உணவுத் திட்டத்திற்கும் 108 மில்லியன் ரிங்கிட் நிதி வழங்கப்படுகிறது. இதன் மூலம் அந்தப் பிரிவு பாலர்பள்ளியில் பயிலும் 240,000 மாணவர்கள் பயன் அடைவர்.அதோடு ஆரோக்கியமான, தரமிக்க உணவுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்வதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகளும் இதில் அடங்கும்.
50,000 மடிகணினிகள்
இவ்வாண்டு கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகள், கல்விக்கூடங்களுக்கு மொத்தமாக 50 ஆயிரம் மடிகணினிகளை அரசாங்கம் விநியோகிக்கும். கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர் பங்களிப்பையும் பள்ளிகளில் டிஜிட்டல் முறையிலான கல்வி செயல்பாடுகளின் அவசியத்தையும் கணக்கில்கொண்டு இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பள்ளிகளில் துப்புரவுப் பணி
நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நிலையிலான பள்ளிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் மொத்தமாக 20 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
உயர்கல்வி அமைச்சுக்கு 15.3 பில்லியன் ரிங்கிட்
2022 வரவுசெலவுத் திட்டத்தில் உயர்கல்வி அமைச்சுக்கு 14.5 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கிடப்பட்டது. ஆனால், இம்முறை சற்று கூடுதலாக 15.3 பில்லியன் ரிங்கிட் நிதி இந்த அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளது.அதில் குறிப்பாக 436 மில்லியன் ரிங்கிட் அரசாங்க உயர்கல்விக்கூடங்களின் கட்டமைப்பை சீரமைப்பதற்கும் அங்கு மோசமான நிலையில் உள்ள தளவாடங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தப்படும்.

உயர்கல்விக்கூட இணைய வசதிக்கு 35 மில்லியன் ரிங்கிட்
MYREN எனப்படும் மலேசிய ஆய்வு – கல்வித் தொடர்புத் திட்டத்தின் வழி நாட்டிலுள்ள உயர்கல்விக் கூடங்களில் இணைய வசதியை மேம்படுத்துவதற்கும் 35 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆய்வு நடவடிக்கைகளுக்கு 428 மில்லியன் ரிங்கிட்
உயர்கல்வி அமைச்சு – அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத்துறை அமைச்சின் கீழ் ஆய்வு நடவடிக்கைகள்மேற்கொள்ள 428 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகின்றது. அதில் சமூகம் – தொழில்துறை விவகாரங்களுக்கான தீர்வில் கூடுதல் நன்மைகள் வழங்கக்கூடிய ஆய்வுகளை உயர்கல்வி அமைச்சு துரிதப்படுத்துவதற்கு 50 மில்லியன் ரிங்கிட் கூடுதல் நிதியும் அடங்கும்.
பிடிபிடிஎன் கடன் திட்டத்தில் சிறப்புச் செயல்பாடுகள்
கடந்த மார்ச் 1ஆம் தேதி தொடங்கி 3 மாதங்களுக்கு பிடிபிடிஎன் கல்வி கடனுதவியைத் திரும்பச் செலுத்துவதில் அரசாங்கம் 20 விழுக்காடு வரை கழிவு வழங்கியது.அதேபோல் பாதிக்கப்பட்ட கடன்தாரர்களின் சுமையைக் குறைப்பதற்கு புதிய வழிமுறையையும் அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. 1,800 ரிங்கிட்டிற்கும் குறைவான சம்பளம் பெறும் கடன்தாரர்களுக்கு அமைச்சு 6 மாத காலத் தவணை ஒத்திவைப்பு வழங்கியுள்ளது.
திவெட் பட்டதாரிகளுக்கு உயர்ந்த சம்பளம் – அரசு உறுதிசெய்யும்
90 விழுக்காடு திவெட் பட்டதாரிகளுக்கு வேலை கிடைத்திருப்பதாகவும் ஆனால் அதிலும் 90 விழுக்காட்டினர் மாதாந்திரம் 2,000 ரிங்கிட் அளவிலான குறைந்த சம்பளத்தைப் பெறுவதாகவும் தரவுகள் கூறுகின்றன.ஆனால் இதுவரையில் அரசாங்கம் திவெட் திட்டத்திற்காக 6.7 பில்லியன் ரிங்கிட் நிதியைச் செலவிட்டுள்ளது. எனவே இந்தச் சுழலை ஏற்றுக்கொள்ள முடியாது. அந்த திவெட் பட்டதாரிகள் 2,000 ரிங்கிட்டிற்கும் மேற்பட்ட தொகையில் சம்பளம் பெறுவதை உறுதிசெய்ய அரசாங்கம் முனைகின்றது.









