செகாமாட், லாபிஸ் தெனாங் ஸ்டேஷன் அருகே Km167 ஜாலான் ஜோகூர் பாரு- சிரம்பான் என்ற இடத்தில் நேற்று மாலை மூன்று வாகனங்கள் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் நான்கு குழந்தைகள் உட்பட மேலும் 11 பேர் காயமடைந்துள்ளதாக லாபிஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தலைவர் ஜகாரியா முகமது தெரிவித்தார்.
மாலை 5.16 மணியளவில் பேரிடர் அழைப்பு வந்ததை அடுத்து, லாபிஸ் மற்றும் பண்டார் பாரு செகாமாட் நிலையங்களில் இருந்து 18 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த விபத்தில் இரண்டு கார்கள் மற்றும் ஒரு ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனம் (SUV) சிக்கின. மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். அதே காரில் பயணித்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் என ஏழு பேர் காயமடைந்ததாக அவர் நேற்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
எஸ்யூவியில் இருந்த இரண்டு ஆண்களும், மற்றொரு காரில் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு சிறுமியும் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் சிம்பாங் ரெங்காம், குகுவாங் மற்றும் பொந்தியானில் உள்ள பெனுட் ஆகிய நகரங்களைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் என்பது தெரிய வந்தது.









