பி.ஆர்.ராஜன்
மனிதக் கடத்தல் கொடூரம் – நேப்பாளத்தில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் சிரம்பானைச் சேர்ந்த மாலா வேலுவை பத்திரமாக மீட்க வேண்டும் என்று செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.ஒரு மலேசிய பிரஜையான மாலா வேலு தற்போது அநியாயமான ஒரு சூழ்நிலையில் நேப்பாளத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.இந்த சம்பவத்தை நன்கு ஆராய்ந்து பார்த்தால் மனிதக் கடத்தல் இதன் பின்னணியில் இருப்பது தௌ்ளத் தெளிவாகத் தெரிகிறது.மனிதக் கடத்தல் வலையில் மாலா சிக்கியிருக்கிறார் என்பதற்கான ஆதார அறிகுறிகள் தெளிவாக இருக்கின்ற நிலையில் அவருடைய கடப்பிதழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பசி, பட்டினியால் அவர் வாடுகிறார். உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளாக வீட்டுப் பணிப்பெண் வேலையில் ஈடுபடும்படி அவர் பலவந்தப்படுத்தப்பட்டிருக்கிறார். நேப்பாள் நாட்டுச் சட்டம் இவரின் இந்த அவலத்தை முறையாக அணுகுவதில் தோல்வி கண்டிருக்கிறது.மாலாவுக்கு இப்போது சட்ட உதவி மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. இந்நிலையில் தாம் மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ உத்தாமா ஹாஜி முகமட் ஹசானுக்கு அதிகாரப்பூர்வமாக ஒரு கடிதம் அனுப்பியிருப்பதாக சிவராஜ் குறிப்பிட்டார்.நேப்பாள் நாட்டு அரசாங்கம் இவ்விவகாரத்தில் தலையிடுவதற்கு வெளியுறவு அமைச்சு உதவ வேண்டும் என்று அக்கடிதத்தில் தாம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
மாலா நாடு திரும்புவதற்குரிய அனைத்து சாத்தியப்பூர்வமான உதவிகளும் நல்கப்பட வேண்டும். வரும் தீபாவளி திருநாளுக்குள் அவர் குடும்பத்தோடு மீண்டும் சேரவேண்டும் என்று டத்தோ சிவராஜ் மலேசிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.இது ஒரு கொடூரச் செயல். மனிதக் கடத்தலால் பாதிக்கப்படும் பொதுமக்கள் மிகக் கொடூரமாக நடத்தப்படுகின்றனர். மாலா விரைந்து இந்தக் கொடூர வலையிலிருந்து விடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.





















