ஈப்போ:
இன்று அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் (NSE) 290 ஆவது கிலோமீட்டரில் 26 பயணிகளுடன் பயணித்த விரைவுப் பேருந்து ஒன்று, டிரெய்லரின் பின்புறத்தில் மோதியதில் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
காலை 5.16 மணியளவில் சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் பின்னர், சம்பவ இடத்திற்கு சிம்பாங் பூலாய் மற்றும் கோபெங் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) செயல்பாட்டு துணை இயக்குநர் சபரோட்ஸி நோர் அமாட் கூறினார்.
“இந்த விபத்தால் பேருந்து ஓட்டுநர் வாகனத்தில் சிக்கிக் கொண்டார் அதேநேரம் நான்கு பயணிகள் காயமடைந்தனர்” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் விபத்தில் சிக்கிய பாதிக்கப்பட்டவர்களை அகற்றி, காயமடைந்தவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளித்த தீயணைப்பு வீரர்கள், பின்னர் மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் என்று சபரோட்ஸி கூறினார்.























