கோலாலம்பூர்:
மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டுக்கு இருமல் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத்தகவலை அவரது செய்தித்தொடர்பாளர் இன்று (ஜூலை 18) வெளியிட்டார்.
99 வயது டாக்டர் மகாதீர் ஜூலை 15ஆம் தேதியிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தேசிய இதய நோய் நிலையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் இன்னும் சில நாள்கள் அங்கு தங்கி சிகிச்சை பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
டாக்டர் மகாதீருக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதுண்டு. அதன் காரணமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம், தொற்று காரணமாக அவர் தேசிய இதய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூன்று மாதங்கள் கழித்து அவர் வீடு திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.























