கோலாலம்பூர்:
ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த 48 வயது விஜயலெட்சுமியை தேடி மீட்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்படுவதாக அரசாங்கம் இன்று மதியம் அறிவிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி தொடங்கிய தேடல், மீட்பு பணிகள் 9 நாட்களுக்கு பிறகு இன்று ஆகஸ்டு 31 ஆம் தேதி நிறுத்தப்பட்டது.

கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா ஜாலான் மஸ்ஜிட் இந்தியாவில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
தீயணைப்பு – மீட்பு இலாகா, போலீஸ், இண்டாவாட்டர் கொன்சோர்ட்டியம், நிபுணர்கள், துறை சார்ந்த ஏஜென்சிகள் ஆகியோரின் கருத்துக்களும் பரிந்துரைகளும் அடங்கிய ஓர் அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

விரிவான ஆய்வுகளுக்குப் பின்னர் தேடல், மீட்பு பணிகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டது என்று ஸலிஹா தெரிவித்தார்.
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மேலும் அதன் சுற்றுப்பகுதிகளின் பாதுகாப்பு, சுகாதாரம், தேடல் – மீட்பு அதிகாரிகளின் உடல் நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் இப்பகுதி இயல்பு வாழ்கை நிலைக்கு திரும்ப வேண்டும், வியாபாரிகளின் நலன்கள் காக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் அரசாங்கம் இம்முடிவை எடுத்திருக்கிறது என்று அமைச்சர் மேலும் சொன்னார்.
அரசாங்கத்தின் இம்முடிவு விஜயலெட்சுமியின் கணவர் மாத்தையா, மகன் சூர்யா ஆகியோரிடம் முறையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலேசியாவுக்கான இந்திய ஹை கமிஷனிடமும் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டுவிட்டது என்று ஸலிஹா கூறினார்.
கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி வெள்ளிக் கிழமை காலை 8.20 மணியளவில் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா, மலேயன் மேன்சன் நடைபாதையில் நடந்து சென்ற போது ஏற்பட்ட திடீர் மண் அமிழ்வில் விஜயலெட்சுமி புதைந்தார்.
கிட்டத்தட்ட பத்து மீட்டர் ஆழத்தில் புதைந்து போன அவரை தேடி மீட்பதற்கு பல்வேறு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன.
சம்பவம் நிகழ்ந்த தினத்தில் தகவல் கிடைக்கப் பெற்ற ஏழாவது நிமிடத்தில் தேடல், மீட்பு பணிகள் துரிதமாக தொடங்கின என்று ஸலிஹா குறிப்பிட்டார்.





















