சுங்கை பட்டாணி:
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களைத் தங்களின் வசம் வைத்திருந்த வழக்கில், 15 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சுங்கை பட்டாணி மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (Magistrate’s Court) இன்று தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மஜிஸ்திரேட் நூரஃபாரா ஹஸ்வானி ஒஸ்மான் (Noor Farah Hazwani Osman) முன்னிலையில் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்டபோது, சிறுவர்கள் இருவரும் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.
கடந்த ஜூலை 14 மற்றும் 15-ஆம் தேதிகளில், இரவு 11:00 மணியளவில் இங்குள்ள ‘சூராவ் தாமான் முத்தியாரா’ (Surau Taman Mutiara) வளாகத்தில் இரு வேறு நபர்களுக்குச் சொந்தமான ‘ஹோண்டா C100’ (Honda C100) ரக மோட்டார் சைக்கிள்களைத் தங்களின் வசம் வைத்திருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.
இவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 411 (திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருத்தல்)-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இவர்களில் ஒரு சிறுவன், ஜூலை 15 அன்று அதே பகுதியில் திருடப்பட்ட மற்றொரு மோட்டார் சைக்கிளை மறைக்க/அழிக்க முயன்ற குற்றத்தையும் ஒப்புக்கொண்டான். இதற்காக அவன் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 414-இன் கீழ் தனியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அரசுத் தரப்பில் காவல் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஃபரா அமீரா முகமது ஹசிம் ஆஜரானார். சிறுவர்கள் இருவர் தரப்பிலும் வழக்கறிஞர்கள் எவரும் ஆஜராகவில்லை.
சிறுவர்களின் சமூக மற்றும் நன்னடத்தை அறிக்கையை (Moral Report) நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக இந்த வழக்கை செப்டம்பர் 8-ஆம் தேதிக்கு மஜிஸ்திரேட் ஒத்திவைத்தார். அதன்ப பிறகே தண்டனை விபரம் அறிவிக்கப்படும்.
மேலும் சிறுவர்கள் இருவருக்கும் தலா RM200 மற்றும் RM400 தொகையில் ஒரு பிணையாளருடன் பிணை (Bail) அனுமதிக்கப்பட்டது.
சுங்கை பட்டாணி KTMB இரயில் நிலையப் பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி வந்த ‘வென்ட்ரி கும்பல்’ (Geng Ventri) என்ற சிறுவர் கும்பலைச் சேர்ந்த 4 பேரைப் போலீசார் கடந்த வாரம் கைது செய்து இக்கும்பலை முறியடித்தனர். பள்ளியிலிருந்து நின்றுவிட்ட 15 வயதுச் சிறுவன் ஒருவனே இக்கும்பலின் முக்கியச் சூத்திரதாரியாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.





















