புத்ராஜெயா:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலைய (KLIA) முனையம் 1, சிப்பாங்கில் நேற்று வழக்கமான கண்காணிப்பு நடவடிக்கையின்போது, மலேசியாவிற்குள் நுழைவதற்குத் தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்யாது, நாட்டிற்குள் நுழைய முயன்ற 64 வெளிநாட்டினரை மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் (AKPS) முறியடித்தனர்.
AKPS, இந்த நடவடிக்கையின் போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 330 வெளிநாட்டினரிடம் எதேட்சையாக சோதனைகள் நடத்தப்பட்டன, இதில் சந்தேகத்திற்கிடமான நடத்தையை வெளிப்படுத்தும் நபர்கள் மற்றும் குடியேற்ற சோதனை கவுண்டருக்கு நேரடியாகச் செல்லாமல் வருகை மண்டபத்தைச் சுற்றித் திரிந்தவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டது.
இந்த சோதனைகளைத் தொடர்ந்து, 57 வங்கதேசிகள்,5 இந்தியர்கள் மற்றும் 2 பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு நிர்ணயிக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் AKPS தெரிவித்துள்ளது.
“அவர்களில் சிலர் அதிகாரிகளை தவறாக வழிநடத்த மோசடி தந்திரங்களைப் பயன்படுத்தியதும் கண்டறியப்பட்டது, இதில் தவறான ஹோட்டல் முன்பதிவுகள் மற்றும் இல்லாத அல்லது புனையப்பட்ட விமான டிக்கெட்டுகள் போன்ற தவறான ஆவணங்களை காட்டியது என்பன அடங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் எல்லைக் கட்டுப்பாடு மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக AKPS மேலும் தெரிவித்துள்ளது.
























