விக்ரம் சுகுமாரன் பரமக்குடியைச் சேர்ந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த அவர், இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்தார். 1999ஆம் ஆண்டு தொடங்கி 2000 வரை வெளியான அவர் பாலுமகேந்திராவிடம் பணிபுரிந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் நேற்று நள்ளிரவில் காலமானார். மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பஸ் ஏறும் போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு காலமானார். சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள விக்ரம் சுகுமாரனின் வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.
விக்ரம் சுகுமாரனின் மறைவுச் செய்தியை நடிகர் சாந்தனு தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள சாந்தனு, “அமைதியாக உறங்குகள் சகோதரா. உங்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு தருணத்தையும் எப்போதும் போற்றுவேன். மிக விரைவாக சென்றுவிட்டீர்கள்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார். விக்ரம் சுகுமாரன் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.





















