ஐ.நா. – வாழ்விட பேரவைத் தலைவராக மலேசியா தேர்வு அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு

புத்ராஜெயா,

கென்யா, நைரோபியில் அண்மையில் நடைபெற்ற ஐ.நா. – வாழ்விட பொதுப்பேரவையில் மலேசியா அதன் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங்கிற்கு அமைச்சின் உற்சாக வரவேற்பு நல்கப்பட்டது. அமைச்சின் உயர்நிலை அதிகாரிகள், பணியாளர்கள் அமைச்சரின் இந்த வெற்றியை மிகப் பெருமையுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் வரவேற்பு முகப்பிடத்தில் நடைபெற்ற ஓர் எளிய நிகழ்ச்சியில் ஆனால் மிகவும் அர்த்தமுள்ள வரவேற்பில் மலேசியாவின் இந்த வெற்றிக்குக் காரணமாக இருந்த அமைச்சர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகள் தெரிவித்தனர். இந்தத் தேர்வின் வழி உலக அரங்கில் மலேசியா முன்னிலையில் வைக்கப்பட்டிருக்கிறது.

மக்களுக்கு நியாயமான வீடுகளைக் கட்டித்தரும் திட்டங்களிலும் நகர்ப்புறங்களை மேம்படுத்தும் முயற்சிகளிலும் மலேசியாவின் நிபுணத்துவம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு ஒரு புதிய சமுதாய உருவாக்கத்திற்குக் கிடைக்கப்பெற்ற ஒரு வாய்ப்பாக இந்தத் தேர்வு அமைகிறது. உலகளாவிய அளவில் நகர்ப்புறங்களை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்கும் கடப்பாட்டைக் கொண்டிருக்கும் மலேசியாவின் முயற்சிகளுக்கும் திட்டங்களுக்கும் கிடைத்திருக்கும் ஓர் அனைத்துலக அங்கீகாரமாக மலேசியாவிற்குக் கிடைத்திருக்கும் இந்தத் தலைமைப் பொறுப்பு அமைகிறது.

ஐக்கிய நாட்டுச் சபையில் மிகவும் பிரபலமான நகர்ப்புற சீரமைப்புக் களத்தில் மிக உயரிய பதவியை மலேசியா பெற்றிருப்பது இதுவே முதன் முறையாகும். இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஙா கோர் மிங், இந்த மாபெரும் வெற்றியின் பின்னணியில் செயல்பட்ட அமைச்சின் ஒட்டுமொத்த பணியாளர்கள், உயர்நிலை அதிகாரிகள், அமைச்சின் கீழ் செயல்படும் இலாகாக்கள், ஏஜென்சிகள் ஆகியோரின் முக்கியப் பங்களிப்பு இருந்ததைச் சுட்டிக்காட்டி நன்றி தெரிவித்தார்.

மலேசியாவின் புறநகர் மேம்பாடு, வீடமைப்புக் கொள்கைகள் ஆகியவை மலேசியாவை இன்று அனைத்துலக அளவில் இடம்பெறச் செய்திருக்கிறது. அமைச்சில் பணிபுரியும் கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான அரசாங்கப் பணியாளர்கள் இதுவரை ஆற்றிவந்திருக்கும் மிகக்கடுமையான பணிகளின் விளைவாக ஐ.நா. – வாழ்விடப் பேரவையின் தலைவராக மலேசியா தேர்வு பெறுவதற்கு வழிவகுத்திருக்கிறது.

இது ஓர் அணியின் வெற்றி திறமை, கடப்பாடு ஆகியவை இந்த வரலாற்றுப்பூர்வச் சாதனைக்குக் காரணங்களாக அமைந்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார். வீடமைப்பு. ஊராட்சித்துறை அமைச்சின் ஒட்டுமொத்த பணியும் சோர்வின்றி அணுக்கமான ஒத்துழைப்பை நல்கியதன் வழி இன்று ஒரு புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.

அனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு உண்மையாக பாடுபட்டால் வெற்றி நம் வசமாகும் என்பதற்கு இந்த உயரிய பதவி மிகச்சிறந்த முன்னாதாரணம் என்று ஙா கோர் மிங் குறிப்பிட்டார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் தலைமைத்துவத்தின் கீழ் உலக மேடைகளில் அதிகச் சக்திவாய்ந்த, செல்வாக்குமிக்க நாடாக மலேசியா இன்று மிளிரத் தொடங்கி இருக்கிறது ஒன்றும் அவர் சொன்னார்.

இந்த வாய்ப்பானது அனைத்துலக ரீதியில் வியூக ஒத்துழைப்புக்கான அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நகர மேம்பாட்டில், அதன் திட்டமிடலில் மலேசியா தலைமைத்துவம் ஏற்றிருப்பது அதன் தோற்றத்திற்கு உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிட்டியிருக்கிறது. அதேசமயம் உலகளாவிய அளவில் கொள்கை விவாதங்களில் மலேசியாவின் குரல் ஓங்கி ஒலிப்பதற்கும் வழிவகுக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சின் துணைத் தலைமைச் செயலாளர் (திட்டம்) வியூகம்) முகமட் ஹஸ்லி பின் அமாட் என்ற அட்னான், கோலாலம்பூர் டத்தோ பண்டார்  டத்தோஸ்ரீ படுக்கா மைமுனா முகமட் ஷாஃரிப், பெமாண்டு செயற்குழு ஆலோசகர் ஆ டாக்டர் நெய்ல் கோர், இலாகா தலைவர்கள், ஏஜென்சிகளின் தலைவர்கள், அமைச்சின் உயர் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள்: ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here