News By R.Malini
மலாக்கா,
ஓம் சக்தி! ஓம் சக்தி! என பக்தி பரவசம் முழங்க, தேவி ஸ்ரீ கரு மகா காளியம்மன் ஆலய வருடாந்திர திருவிழா ஜாசின் மைல் கம்போங் இந்தியா பகுதியில் கோலாகலமாக நடைபெற்றது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்ற இந்த திருவிழாவில் 15,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், நாடு தழுவிய பல்வேறு பகுதிகளில் இருந்து திரளாகக் கலந்து கொண்டனர்.
ஆலயத் தலைவர், காளி உபாசகர் மகாலிங்கம் சாஸ்திரிகள் தலைமையில், திருவிழா ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியாகவும் பக்தி பூர்வமாகவும் நடைபெற்றது.

முதன்மை சாலையிலிருந்து ஆலய வளாகம் வரை, வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, திருவிழா இடம் பெற்ற இடம் முழுவதும் விழாக்கோலம் காணப்பட்டது.
சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு, ஆலய விஷேஷ பூஜைகள் முடிந்த பிறகு, காளியம்மன் இரு காளை மாடுகள் பூட்டப்பட்ட அழகிய தேரில் ஊர்வலமாக வந்தார். அங்கு குழுமியிருந்த 500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால் குடங்கள், காவடிகள், கரும்பு காவடிகள் போன்றவை ஏந்தி புடைசூழ, ஆலயத்தை வந்தடைந்தனர். பின்னர் காளியம்மனுக்கு விஷேஷ அபிஷேகம் நடைபெற்றது.
பொய்க்கால் குதிரை, கரகாட்டம், மயிலாட்டம் ஆகிய பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் விழா களைகட்டியது.

ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பிற்பகல் 12.00 மணிக்கு, பக்தர்கள் தீச்சட்டிகளை ஏந்தி காளியம்மனை வலம் வந்தனர்.
நாதஸ்வர இசை, உருமி மேளம், வாத்தியக் குழு இசைகள் விழாவுக்கு இசை அரங்கில் ஊக்கம் தர, பக்தர்கள் பரவசமடைந்தனர். திருவிழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழை இலை மீது உணவு பரிமாறப்பட்டது.
ஆலய நிர்வாகத்தின் அரவணைப்பும், வட்டார இளைஞர்கள் மற்றும் தொண்டூழியர்கள் ஒத்துழைப்பும், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத் திருவிழாவை வெற்றிகரமாக மாற்றி வருகிறது.
இந்நிகழ்வை முன்னிட்டு, அனைத்து நன்கொடையாளர்களுக்கும், மற்றும் வருகை தந்த பொது மக்களுக்கும், ஆலய நிர்வாகம் தனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துள்ளது.





