ஷா ஆலம்:
இங்குள்ள செக்சியன் 14 பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில், சிலாங்கூர் குற்றப்புலனாய்வு துறையைச் சேர்ந்த (CID) மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து இன்று அதிகாலை 3.07 மணியளவில் ஷா ஆலம் மாவட்ட போலீஸ் தலைமையக கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கான் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலேயே அந்த அதிகாரி உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது உடற்கூறு பரிசோதனை முடிவுகள் வெளியாகும் வரை, இந்த வழக்கு ‘திடீர் மரணம்’ (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஷாசெலி கான் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த அதிகாரியின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட அவர், இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் சமூக ஊடகங்களில் வீண் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.













