News By: Editor B.R.Rajan
கோலாலம்பூர்,
மலேசிய இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பின்னணியில் இருந்து வேலை செய்து வருவதாக பிகேஆர் தேசியத் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வார் அண்மையில் கூறியிருந்தார். இதற்கு ஆதாரம் காட்டும்படி மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவருக்கு சவால் விடுத்தார்.
ஆளும் அரசாங்கத்தில் பிகேஆர் ஓர் அங்கமாக இருக்கின்ற நிலையில் இவர் ஏன் அமைதியாக வேலை செய்ய வேண்டும். இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வு காண்பதற்குரிய அதிகாரம் கையில் இருக்கும்போது ஏன் திரை மறைவில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் கேள்வி எழுப்பினார்.
நூருல் இஸ்ஸா மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. ஆனால், திரைக்குப் பின்னால் என்ற அணுகுமுறை வழி இதுவரை இந்தியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அவர் உதவி இருந்தால் என்ன பிரச்சினைகள் என்பது பற்றிய முழு பட்டியலை வெளியிடும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
பாரிசான் நேஷனல் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மஇகா இதே தவற்றைத்தான் செய்தது. மலேசிய இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கத்திடம் விடுக்கப்பட்ட மஇகாவின் கோரிக்கைகள் எதுவும் செய்திகளாக விளம்பரப்படுத்தப்படவில்லை. இந்தத் தவற்றை நூருல் இஸ்ஸாவும் செய்துவிடக் கூடாது.
13ஆவது மலேசியத் திட்டத்தைப் பொறுத்தவரை மலேசிய இந்திய சமுதாயத்திற்கு என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பதை மஇகா தெரிந்துகொள்ள விரும்புகிறது. மீண்டும் மீண்டும் இந்திய சமுதாயம் விடுபட்டுவிடக் கூடாது என்பது எங்களது கவலையும் அக்கறையுமாக இருக்கிறது என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
மலேசிய இந்தியர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அமைதியான முறையில் வேலை செய்து வருவதாகவும் இது தான் எதுவும் செய்யவில்லை என்று அர்த்தமாகிவிடாது என்றும் தம்முடைய மௌனத்தை நூருல் இஸ்ஸா நேற்று முன் தற்காத்தார்.
ஆக்கப்பூர்வமான தீர்வுகளையும் முடிவுகளையும் காண்பதற்கு அமைதியான அணுகுமுறையின்கீழ் வேலை செய்வதையே தாம் விரும்புவதாகவும் செய்யும் அனைத்து காரியங்களையும் செயல்களையும் விளம்பரம் போட்டுக் காட்டுவதற்கு விரும்பவில்லை என்றும் நூருல் இஸ்ஸா கூறியிருந்தார்.
13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமுதாயத் தலைவர்கள் முன் வைத்திருக்கும் பரிந்துரைகள் குறித்து கருத்துரைத்து வெளியிட்ட ஓர் அறிக்கையில் காரியத்தை நான் நம்புகிறேன். இதற்கு வெளிப்படையான நாடகம் தேவையில்லை என்று தெரிவித்திருந்தார்.
மலேசிய இந்தியர்களைப் பாதிக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கிள்ளான் தொகுதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ, மேலும் இதர அணிகளுடன் பணியாற்றிய அனுபவத்தையும் அவர் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.
பொருளாதார நிபுணர்கள், அரசாங்க அதிகாரிகள், அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், சமுதாயப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய திட்டமிடல் குழுக்களிடமிருந்து உருமாற்றத்திற்கான தீர்வுகளைக் காணும் திட்டத்தை தாம் முன்னெடுத்திருப்பதாக அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்த டத்தோஸ்ரீ சரவணன், இந்த முயற்சிகள் போதுமானதா என்பதை மதிப்பீடு செய்வதற்கு இந்தியர்கள் அனுமதிக்கப்பட வேண்டும். நேரம் வரும்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்திருக்கிறதா? அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை
நிறைவேற்றியிருக்கிறதா? என்பதை அவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என்று சொன்னார்.
இந்திய சமுதாயம் மிக நீண்ட காலமாக எதிர்நோக்கியிருக்கும் சவால்களுக்குத் தீர்வுகாண்பதற்கும் உருமாற்றங்களுக்கும் மஇகா 8 அம்சப் பரிந்துரைகளை 13ஆவது மலேசியத் திட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளது. இதில் மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா நிதிகள் அரசியல் தலையீடுகள் ஏதும் இன்றி சரியானவர்களுக்குப் போய்ச் சேருவதில் உறுதி செய்வதற்கு அந்நிதி முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு வெளிப்படைத் தன்மையுடன் வழங்கப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும் என்று சரவணன் குறிப்பிட்டார். அதேசமயத்தில் தமிழ்ப் பள்ளிகளுக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு, உத்தரவாதத்துடன் கூடிய பள்ளி கட்டமைப்பு ஆதரவு, தொழில்நுட்பம், தொழில் கல்வி, பயிற்சி (திவெட்) திட்டத்தின் கீழ் இந்திய இளைஞர்களுக்கு அதிநவீன திறன் பயிற்சிகள், மறு திறன் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது இன்னொரு கோரிக்கையாகும் என்று அவர் சொன்னார்.
மேலும் இந்து சமய வழிபாட்டுத் தலங்கள், கலாச்சாரப் பாரம்பரியங்கள், தனியார் நிலங்களில் உள்ள ஆலயங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தையும வலியுறுத்தியிருக்கிறோம்.
இந்திய சமுதாய மேம்பாட்டிற்கு மத்தியில் மையப்படுத்தப்பட்ட ஒரு பெருந் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். இதன்வழி அனைத்துத் திட்டங்களும் முறையாக கண்காணிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு சரியான வழிகாட்டலுடன் ஆக்கப்பூர்வமாக இந்திய சமுதாயத்திற்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதும் அந்தப் பரிந்துரைகளில் அடங்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்





















