மூவார்,
லிட்டர் ஒன்றுக்கு வெ.1.99 என நிர்ணயிக்கப்பட்ட ரோன் 95 மானிய விலை பெட்ரோல் மலேசியர்கள் மட்டுமே பயன்படுத்துவதற்கானது என்றும், அதே சமயம் வெளிநாட்டினர்கள் சந்தை விலையிலேயே (வெ.2.50 அல்லது வெ.2.60) வாங்க வேண்டும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தின் சமூக நீதிக்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கையின் ஒரு பகுதியாக, அரசாங்கம் வழங்கும் மானியத்தால் நன்மை பெறுவதைக் நாட்டு மக்களுக்கு மட்டுமே உறுதி செய்வதற்காகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
“இது பாகுபாடு அல்ல. மக்களின் நலனை காக்கும் ஒரு இறையாண்மைக் கொண்ட அரசின் தைரியமான கொள்கை இது,” என்றார் அவர்.
மூவாரில் உள்ள டத்தாரான் தஞ்சோங் இமாஸ் வளாகத்தில் 2025 தேசிய கொடி பறக்க்க வைக்கும் தொடக்க விழாவில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார்.
வரி செலுத்தாத வெளிநாட்டு பயணிகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் நேரடி பங்களிப்பு இல்லாதவர்களும், இதுவரை மலேசியர்களுக்கு வழங்கப்படும் மானியச் சலுகைகளை அனுபவித்து வந்தனர். இந்த நிலைமை நாட்டின் நிதி செலவுகளை அதிகரித்தது என்றும், இப்போது எடுத்த நடவடிக்கையால் அந்தச் செலவுகளை குறைக்க முடியும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், ரோன் 95 மானியத்தை மலேசியர்களுக்கே மட்டுப்படுத்தும் முடிவை விமர்சித்த ஜோகூர் மாநிலத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக விமர்சித்த பிரதமர், “அந்நியர்கள் ஏன் அதிக விலை கொடுக்க வேண்டும்? என்று கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எனக்கு பதில் தெரியவில்லை,” என்று விமர்சித்தார்.
“வெளிநாட்டவர்கள் நம்மைப் போல வரி செலுத்துவதில்லை. எந்த நாட்டில் பிற நாட்டினர், சொந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை பெறுகின்றனர்? மலேசியர்களின் நலனை பாதுகாப்பது என் தலையாய பொறுப்பு,” என பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.




















