வாஷிங்டன்:
அமெரிக்காவில் புறப்பட தயாரான விமானத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட பரபரப்பில், அவசர வழியில் 173 பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்திலிருந்து மியாமிக்குப் புறப்படத் தயாரான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஏ-3023, ஓடுபாதையில் புறப்பட முயன்றபோது, அதன் லேண்டிங் கியரில் இருந்தது திடீரென டயர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீப்பிடித்து புகை மண்டலமாக மாறியது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசரகால வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லேண்டிங் கியர் டயரில் ஏற்பட்ட பழுதுதான் விபத்திற்குக் காரணம் என விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விசாரணை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணி ஒருவர், தனது குழந்தையை விட உடைமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.





















