கோலாலம்பூர்:
பிரேசிலில், 22 வயது வழக்கறிஞரான லெட்டிசியா பவுல் (Leticia Paul), சிறுநீரகக் கல் பிரச்சனைக்கு, சிடி ஸ்கான் (CT scan) பரிசோதனை மேற்கொண்டபோது, அதில் பயன்படுத்தப்பட்ட ‘கான்ட்ராஸ்ட்’ (contrast) என்ற திரவத்திற்கு ஏற்பட்ட கடுமையான ஒவ்வாமை காரணமாக உயிரிழந்து, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, ரியோ டோ சூல் (Rio do Sul) நகரிலுள்ள ஆல்டோ வாலே பிராந்திய மருத்துவமனையில் (Alto Vale Regional Hospital) இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
லெட்டிசியா, அனாபிலாக்டிக் ஷாக் (anaphylactic shock) எனும் கடுமையான ஒவ்வாமை பாதிப்புக்கு உள்ளானார். அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அவரது குடும்பத்தினர், லெட்டிசியா மிகவும் திறமையானவர் என்றும், சட்டத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று கனவு கண்டவர் என்றும் கூறினர்.
மருத்துவமனை நிர்வாகம், அனைத்து நடைமுறைகளும் மருத்துவ விதிகளின்படி பின்பற்றப்பட்டன என்று கூறியுள்ளது. அதேசமயம், இத்தகைய திரவங்கள் பாதுகாப்பானவை என்றாலும், உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினைகள், 5,000 பேரில் ஒருவருக்கு, அல்லது 10,000 பேரில் ஒருவருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மிகவும் அரிதானவை என்று நிபுணர்கள் விளக்கினர்.





















