கோலாலம்பூர், அக்டோபர் 8 –
கடந்த மாதம் ஜோகூர், மூவாரில் (Muar) தனது குடும்ப வீட்டிற்கும் வாகனங்களுக்கும் தீ வைத்த வழக்கில் விதிக்கப்பட்ட நீதிமன்ற அபராதத்தைச் செலுத்தத் தவறியதைத் தொடர்ந்து, முன்னாள் டெக்னீஸன் முகமட் நபில் அபு பக்காரின் சிறைத் தண்டனை இப்போது ஒன்பது ஆண்டுகள், எட்டு மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் ஆரம்பத்தில் அவருக்கு மூன்று தீவைப்பு குற்றச்சாட்டுகளுக்காக எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், RM20,000 அபராதமும் விதித்தது. ஆனால், அவர் அபராதத்தைச் செலுத்தத் தவறியதால், அதற்குப் பதிலாக 20 மாதங்கள் கூடுதல் சிறைத் தண்டனையை நீதிபதி விதித்தார்.
செப்டம்பர் 17 அன்று ஜாலான் ஜெராம் கம்போங் தெங்கா, ஜாலான் பக்ரி ஆகிய இடங்களில் தனது 70 வயதான தந்தையின் வீடு, 59 வயதான தாயின் கார், 35 வயதான சகோதரரின் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை எரித்த குற்றத்தை நபில் புரிந்தார்.
குற்றவியல் சட்டம் பிரிவு 435, 436ன் கீழ் வரும் இந்த குற்றங்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இந்த வழக்கில், துணை அரசு வழக்கறிஞர் நூர் அமீரா அல்லாடீன் ஆஜரானார். அதுமட்டுமின்றி நபில் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.





















