கோத்தா பாரு, பிப்ரவரி 2:
மலேசிய-தாய்லாந்து எல்லைப் பகுதியான தும்பாட்டில், சுமார் 10 டன் கடத்தல் அரிசியைக் கொண்டு சென்ற ஒரு லோரியைப் போலீசார் அதிரடியாகத் தடுத்து நிறுத்தினர்.
‘ஓப்ஸ தாரிங் கெலோரா’ (Operasi Taring Gelora) நடவடிக்கையின் கீழ், 16 முதல் 44 வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் இருவர் ஏற்கனவே போதைப்பொருள் தொடர்பான குற்றப் பின்னணி கொண்டவர்கள்.
நேற்று இரவு 9 மணியளவில், பெங்காலான் குபோர் கடல்சார் போலீசார் ரோந்துப் பணியில் இருந்தபோது, ஒரு லாரி சந்தேகத்திற்குரிய வகையில் செல்வதைக் கண்டு அதைப் பின்தொடர்ந்தனர். காம்பங் கெபாகாட் (Kampung Kebakat) அருகே அந்த லாரி நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
குறித்த லோரியில் தலா 50 கிலோ எடை கொண்ட 200 மூட்டை இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி (Siamese Rice) இருந்தது கண்டறியப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் லோரி ஆகியவற்றின் மொத்த மதிப்பு சுமார் 290,000 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு 1994-ஆம் ஆண்டு நெல் மற்றும் அரிசி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் பிரிவு 20-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலதிக விசாரணைக்காக இந்தப் பொருட்கள் கோத்தா பாரு நெல் மற்றும் அரிசி ஒழுங்குமுறைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடல்சார் எல்லைகளில் நடக்கும் கடத்தல் அல்லது சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தகவல் தெரிந்தால் 09-5137726 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.





















