அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட ஈரானின் கப்பல்களை பறிமுதல் செய்த இந்தியா!

அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை மும்பை அருகே கைப்பற்றியுள்ளது. ஆனால் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம், மூன்று டேங்கர் கப்பல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா என பெயரிடப்பட்ட மூன்று கப்பல்களும் மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், எண்ணெய் எடுக்கப்படும் இடத்தை மறைப்பதற்காக கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய்யை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தக் கப்பல்கள் விசாரணைக்காக மும்பை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மேம்பட்டு வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்ட பிறகு, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா 50%-லிருந்து 18%-ஆக குறைப்பதாக அறிவித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது இந்திய கடலோர காவல்படை தனது கடல்சார் மண்டலங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் 55 கப்பல்களும், 10 முதல் 12 விமானங்களும் இப்போது இந்தியாவின் கடல் மண்டலங்கள் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here