ஈரான் – இஸ்ரேல் போர் ஒரு சாதாரண ராணுவ மோதலாக இல்லாமல், ஈரானின் அதிகார மையங்களை அளிக்கும் ஒரு ‘தலைமைத்துவ வேட்டை’ ஆக உருவெடுத்துள்ளது.
நேற்று (மார்ச் 17), ஈரானின் நிழல் உலக அதிகார மையமாகத் திகழ்ந்த தேசிய பாதுகாப்புச் சபைச் செயலாளர் அலி லாரிஜானி கொல்லப்பட்ட செய்தி மறைவதற்குள் இன்று அதிகாலை ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் மற்றும் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தலைமை இல்லாத நாடாக ஈரானை மாற்றி, ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி, உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களின் தலைவர்களை அழிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் முடக்க நாட்டை வழிநடத்தும் ‘மூளைகளை’ அழிக்கும் இஸ்ரேலின் ராஜதந்திரமாக இது இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
போரின் ஆரம்பத்திலேயே உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது முதல், இன்று வரை
ஈரானின் மிக முக்கியமான தலைவர்கள் வரிசையாகக் குறிவைக்கப்பட்டுள்ளனர். இதனிடேயே அடுத்த உச்ச தலைவராகக் கருதப்படும் மொஜ்தபா காமேனி மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வளவு இழப்புகளுக்கு மத்தியிலும், ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மற்றும் மொஜ்தபா காமேனி ஆகியோர், “எங்கள் தலைவர்கள் கொல்லப்படுவதால் நாடு பலவீனமடையாது” எனச் சவால் விடுத்துள்ளனர். இருப்பினும், இத்தனை குறுகிய நாட்களுக்குள் முக்கிய தலைமைகளை இழப்பது ஈரானுக்கு ஈடுசெய்ய முடியாத பின்னடைவாகவே அமையலாம் என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




















