PKR கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா அன்வர், தான் பதவியிலிருந்து விலகிவிட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகளை மறுத்துள்ளார். “அது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். PKR தலைவர் அன்வர் இப்ராஹிமின் மகளான நூருல் இஸ்ஸா, தனக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்பதாகக் கூறினார். தற்போதைய தலைமையில் எந்த மாற்றமும் இல்லை, கட்சியின் செயல்திட்டத்தை வலுப்படுத்துவதே இப்போது எனது முக்கிய நோக்கமாக உள்ளது என்று அவர் கூறினார்.
இந்த விவகாரத்தில் காட்டப்படும் அக்கறையைப் பாராட்டுவதாகவும், ஆனால் பொதுமக்கள் போலியான தகவல்களாலோ அல்லது “தீய நோக்கமுள்ள யூகங்களாலோ” பாதிக்கப்படக்கூடாது என்றும், மாறாக கட்சியின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இஸ்ஸாவின் இந்த மறுப்பு, அவர் பதவி விலகியதாகக் கூறப்படும் செய்திகளை “போலிச் செய்தி” என்று PKR கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் நிராகரித்த சில நாட்களுக்குப் பிறகு வந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கட்சித் தேர்தலில், நூருல் இஸ்ஸா 2025-2028 பதவிக்காலத்திற்கு PKR கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர், பதவியில் இருந்த ரஃபிஸி ராம்லியை நேரடிப் போட்டியில் தோற்கடித்தார்.





















