பி.ஆர். ராஜன்
கோலாலம்பூர், ஜூலை 10-
நாடு முழுவதும் செயல்படும் அரசாங்கப் பல்கலைக்கழங்களில் இவ்வாண்டு புதிய கல்வித் தவணையின் 80,000 இடங்கள் உயர்கல்விக்கு திறக்கப்பட்டுள்ளன. மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் 40,000 இடங்கள் உள்ளன. இவற்றுள் எத்தனை இடங்கள் இந்திய சமுதாய பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்ற கேள்விகள் தற்போது தலையெடுக்கத் தொடங்கியிருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் புதிய கல்வித் தவணையும் இந்திய மாணவர்கள் பல்வேறு சவால்களையும் பின்னடைவுகளையும் எதிர்கொள்கின்றனர்.
வாய்ப்புக் கேட்டு போராடுவது இந்திய மாணவர்களுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இட வாய்ப்பு மட்டுமன்றி கேட்கும் துறை ஒன்றாக இருக்கும்பட்சத்தில் கொடுக்கப்படுவது வேறு ஒரு துறையாக இருப்பதும் இன்றளவும் தீர்க்கப்படவில்லை.
பல்கலைக்கழகங்களில் 80,000 இடங்களில் 10 விழுக்காட்டு இடங்கள் மலாய்க்காரர் அல்லாத- பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் பட்சத்தில் இதனை இந்திய, சீன, சபா, சரவாக் மாணவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதேநிலைதான் மெட்ரிகுலேஷன் வாய்ப்புகளிலும் நிலவுகிறது. இங்கு மலாய்க்காரர் அல்லாத – பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு 10 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்படும் பட்சத்தில் இந்த பிரிவை சேர்ந்த மாணவர்கள் அதனை பகிர்ந்து கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு இந்திய மாணவர்களுக்கு 3 விழுக்காட்டு இடங்கள் மட்டுமே கிடைக்கப்பெற்றன.
மெட்ரிகுலேஷன் கல்வியைப் பொறுத்தவரை முறையான தகுதிகளை கொண்டிருந்தும் இந்திய மாணவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர். எஸ்பிஎம் தேர்வில் 11ஏ, 10ஏ, 9ஏ பெற்றிருக்கும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இதற்கு முறையான காரணங்களும் தெரிவிக்கப்படுவதில்லை.
பகிரங்கமாக இந்த விவகாரம் வெடிக்கும்போது மறு விண்ணப்பம் செய்யும்படி அந்த மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அப்படியே இடம் கிடைத்தாலும் வெகு தொலைவில் உள்ள கல்லூரிகளுக்கு அவர்கள் அனுப்பப்படுகின்றனர். இன்றளவும் இதற்கு ஒரு நிறைவான தீர்வு எட்டப்படவில்லை.
கடந்த சனிக்கிழமை சிந்தோக்கில் உள்ள யூனிவர்சிட்டி உத்தாரா மலேசியாவில் பிரதமருடனான மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உயர்கல்வி மையங்களில் மலாய்- பூமிபுத்ரா மாணவர்களின் கோட்டா நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை நாம் செய்யத் தவறினால் மலாய்- பூமிபுத்ரா மாணவர்கள் உயர்கல்வியில் பின்தங்கி விடுவதை தவிர்க்க முடியாது என்று குறிப்பிட அவர், 1960ஆம், 1970ஆம்ஆண்டுகளில் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல், மருத்துவத் துறையில் மலாய்- பூமிபுத்ராக்களின் விழுக்காடு 12 மட்டுமே என்பதை சுட்டிக்காட்டினார்.
இந்நிலை தொடருமாயின் உயர்கல்வி துறைகளில் மலாய்- பூமிபுத்ராக்களின் அதோகதிதான் என்றும் அவர் கூறினார். மலாய்- பூமிபுத்ரா மாணவர்களுக்கான கோட்டா நிலைநிறுத்தப்படும் அதே வேளையில் கல்வியில் சிறந்து விளங்கும் மலாய்-பூமிபுத்ரா அல்லாத மாணவர்களையும் குறிப்பாக ஏழை இந்திய சமுதாயத்தை சேர்ந்த பிள்ளைகளையும் உயர்கல்வியில் கை தூக்கி விட வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
ஆனால் இந்திய மாணவர்களுக்கு இத்தனை இடங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை ஓர் உத்தரவாக பிறப்பிப்பதற்கு பிரதமர் தயங்குவது ஏன் என்பது புரியவில்லை. அரசாங்கங்கள் மாறினாலும் உயர்கல்வி விவகாரத்தில் இந்திய மாணவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படாமல் தான் இருக்கின்றன.
உயர்கல்வி வாய்ப்புகளுக்கு இந்திய மாணவர்கள் தொடர்ந்து போராட வேண்டிய ஒரு நிலை இன்னமும் நிலவுகிறது. அவர்கள் விரும்பித் தேர்வு செய்யும் கல்வித் துறைகளும் பெரும்பாலும் கிடைப்பதில்லை. மாறாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு கல்வித்துறையில் வாய்ப்பளிக்கப்படுகிறது.
மிகுந்த ஏமாற்றத்துடன் இவர்கள் தனியார் கல்லூரிகளையும் தனியார் பல்கலைக்கழகங்களையும் நாடிச் செல்ல வேண்டிய நெருக்கடியும் நிர்ப்பந்தமும் ஏற்படுகிறது. தகுதி அடிப்படையில் கல்வி வாய்ப்புகளை வழங்கும் நிலை எப்போது ஏற்படும்? இந்திய சமுதாயம் இதற்கான பதிலுக்காக காத்திருக்கிறது.




















