கோலாலம்பூர்:
ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள குடியிருப்பு ஒன்றில் ‘பூடல்’ (Poodle) ரக நாய் ஒன்றைச் சுவரில் வீசி எறிந்து கொடுமைப்படுத்திய நபரைச் சிலாங்கூர் கால்நடை மருத்துவச் சேவைத் துறை (DVS) தீவிரமாகத் தேடி வருகிறது.
இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பழுப்பு நிற ஆண் நாயைச் சோதனை செய்த அதிகாரிகள், அதன் வலது முன்னங்காலில் காயம் ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பதிவான அக்காணொளிகள் குறித்துப் பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில், 2015-ஆம் ஆண்டு விலங்குகள் நலச் சட்டத்தின் கீழ் தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாகத் தகவல் தெரிந்தவர்கள் அல்லது அந்தச் சந்தேக நபரைப் பற்றி அறிந்தவர்கள் உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கால்நடை மருத்துவத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.




















