ஈப்போ:
ஈப்போவில் உள்ள பிரபல இரவுச் சந்தையான ‘கெர்பாங் மாலாம்’ (Gerbang Malam) பகுதியில், கார் பாலிஷ் செய்யும் கட்டணம் தொடர்பான தகராறில் ஒரு காரின் கண்ணாடியை உடைத்த 43 வயது உள்ளூர் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) இரவு சுமார் 11:40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. காரின் முன்பக்கப் பயணியர் இருக்கை கண்ணாடியை ஒரு நபர் கல்லால் அடித்து உடைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் (Iesya Toh முகநூல் பக்கம்) வைரலானது. இது குறித்து போலீசாருக்குப் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது என்று, ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் நஜிப் ஹம்சா தெரிவித்தார்.
புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், ஏப்ரல் 22-ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபருக்கு ஏற்கனவே எட்டு குற்றப் பதிவுகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 427-இன் கீழ் (சேதம் விளைவித்தல்) விசாரிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
பொது இடங்களில் முன் அனுமதியின்றி அல்லது தேவையில்லாமல் வழங்கப்படும் சேவைகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.























