ஈப்போ:
தைப்பிங் அருகே உள்ள ஜெபோங் (Sungai Jebong) ஆற்றங்கரையில், குப்பைக்குவியலுக்கு இடையே அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 6.45 மணியளவில் ஜாலான் இஸுடின் ஷா (Jalan Izzudin Shah) பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் சடலம் ஒன்று கிடப்பதாகத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது. தகவலறிந்த தைப்பிங் தீயணைப்பு நிலைய வீரர்கள், 7 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்று, பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் (செயல்பாடுகள்) சபாரோட்ஸி நூர் அகமது கூறினார்.
“ஆற்றங்கரையில் தேங்கியிருந்த குப்பைகளுக்கு இடையில் உடல் ஒன்று சிக்கியிருப்பதை பொதுமக்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஆற்றின் சரிவில் இறங்கி, அந்த உடலை மீட்டு பாதுகாப்பான பையில் வைத்து மேலே கொண்டு வந்தனர்.”
மீட்கப்பட்ட உடல் பிரேதப் பரிசோதனைக்காகவும், மேலதிக விசாரணைக்காகவும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் யார்? மரணத்திற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




















