மலாக்காவில் பிக்பாக்கெட் கும்பல் முறியடிப்பு: சீனப் பிரஜைகள் ஐவர் கைது

மலாக்கா:

மலாக்காவின் சுற்றுலாத் தலங்களில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைவரிசை காட்டி வந்த வெளிநாட்டு பிக்பாக்கெட் கும்பலைச் சேர்ந்த ஐந்து பேரை காவல்துறை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 29 முதல் 62 வயதுக்குட்பட்ட சீனப் பிரஜைகள் என்றும் இந்த கும்பல் ‘குவாங்சி கும்பல்’ (Geng Guangxi) என்று அழைக்கப்படுகிறது என்றும் லாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் கிறிஸ்டோபர் பாடிட் கூறினார்.

கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர் தனது பணப்பை மற்றும் கிரெடிட் கார்டை இழந்ததாகப் புகார் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து மலாக்கா குற்றப் புலனாய்வுத் துறையினர் (CID) நடத்திய அதிரடி சோதனையில், அன்றைய தினமே டத்தாரான் பஹ்லவானில் (Dataran Pahlawan) இரண்டு சந்தேக நபர்கள் பிடிபட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், ஏப்ரல் 29 அன்று கோலாலம்பூர், செராஸில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் இக்கும்பல் பெரும்பாலும் ஆண் சுற்றுலாப் பயணிகளையே குறிவைத்துள்ளது தெரியவந்துள்ளது. இதுவரை 5 புகார்கள் பதிவாகியுள்ளன, இதன் மூலம் சுமார் RM20,000 மதிப்பிலான இழப்பு ஏற்பட்டுள்ளது.

சோதனையின் போது, 7 கைபேசிகள், பணப்பைகள் மற்றும் தோள்பைகள், வெளிநாட்டு அடையாள அட்டைகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கரன்சி நோட்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது தண்டனைச் சட்டத்தின் பிரிவு 379 (திருட்டு) மற்றும் குடியேற்றச் சட்டத்தின் பிரிவு 15(1)(c) (தங்குவதற்கான கால அவகாசம் முடிவடைந்தும் தங்கியிருப்பது) ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் நாளை ஆயர் கெரோ (Ayer Keroh) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்லும்போது தங்களது உடைமைகளை மிகவும் கவனமாகப் பாதுகாத்துக் கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here